சிங்கப்பூரின் தெற்கு, மத்திய, மேற்குப் பகுதிகளில் மளிகைப் பொருள்களை உடனடியாக விநியோகம் செய்யும் சேவையை இணைய வர்த்தக நிறுவனமான ‘ரெட்மார்ட்’ அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ரெட்மார்ட் நௌவ்’ (RedMart Now) என்றழைக்கப்படும் அந்த உடனடி விநியோகச் சேவை இணையத்தில் வளர்ந்துவரும் மளிகை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அந்நிறுவனம் கூறியது.
இச்சேவையின் வழியாக, முன்பதிவுகள் ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குள்ளாக தேவைப்படுவோருக்கு விநியோகிக்கப்படும் என்று ரெட்மார்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. விநியோகச் சேவை காலை 10 மணி தொடங்கி, இரவு 9 மணி வரையில் செயல்படும். செந்தோசா, தெலுக் பிளாங்கா, அலெக்சாண்டிரா, பாசிர் பாஞ்சாங், கிளமெண்டி, குவீன்ஸ்டவுன், ரிவர் வேலி, தங்ளின், புக்கிட் தீமா ஆகிய வட்டாரங்களுக்கு இந்த ஆரம்ப சேவை வழங்கப்படும்.
இணைய மின் வர்த்தக நிறுவனமான ‘லசாடா’வின் மளிகை வியாபாரத் தளமான ரெட்மார்ட் ஒருசில வட்டாரங்கள் 30 நிமிடங்களில் வாடிக்கையாளர்கள் முன்பதிவுகளைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. விரைவில் தீவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகச் சேவையை விரிவுபடுத்த ரெட்மார்ட் திட்டமிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) தொடங்கிய விநியோகச் சேவைக்கு $30க்குக் குறைவான முன்பதிவுகளுக்கு $5.99 பொருள்களை அனுப்புவதற்கானக் கட்டணமும், $3.99 சேவைக் கட்டணமும் செலுத்தவேண்டும். $30க்கு மேற்பட்ட முன்பதிவுகளுக்கு $3.99 கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தத் தேவையில்லை.
முதன்முறையாக ரெட்மார்ட் விநியோகச் சேவையை குறைந்தபட்சமாக $30 செலவிட்டு பயன்படுத்துவோருக்கு $3.99 சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

