11 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மளிகைக் கடை உரிமையாளருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய நாட்டவரான 58 வயது ராமலிங்கம் செல்வசேகரனுக்கு புதன்கிழமையன்று (ஜூலை 30) 14 ஆண்டுகள், மூன்று மாதங்கள், இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தச் சிறுமி தமது கடைக்கு வந்தபோது அவருக்கு இலவசமாக குளிர்பானம் ஒன்றை ராமலிங்கம் தந்தார். பிறகு அதே நாளன்று பனிக்கூழ் வாங்க அச்சிறுமி அவரது கடைக்கு மீண்டும் சென்றபோது ராமலிங்கம் அவரைப் பாலியல் ரீதியில் இருமுறை துன்புறுத்தினார்.
ராமலிங்கத்துக்கு 50 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவருக்குப் பிரம்படி கொடுக்க முடியாது.
எனவே, 15 பிரம்படிகளுக்குப் பதிலாக அவருக்குக் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் அது அடங்கும்.
தாம் நிரபராதி என்றும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். அவருக்கு $80,000க்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனைகள் குறித்து நீதிபதியிடம் ராமலிங்கம் வாதிட்டார். தமது உடலில் பொருத்தப்பட்டுள்ள மின்பட்டையை அகற்றவும் காவல்நிலையத்துக்கு அடிக்கடி சென்று பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கவும் ராமலிங்கம் விடுத்த கோரிக்கைகளை நீதிபதி ஏற்க மறுத்தார்.

