சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர்ப்பதற்கென தேசிய அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு சமூகக் குழு ஒன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்ட தேசிய அளவிலான உயிர்மாய்ப்பு தவிர்ப்பு உத்தியின்கீழ் இடம்பெறும் பல்வேறு பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
அந்தக் குழுவின் 23 பரிந்துரைகளில் உயிர்மாய்ப்பைத் தவிர்ப்பதற்கான தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம், பள்ளிப் பாடத்திட்டத்தில் உயிர்மாய்ப்பு தவிர்ப்பு கல்வியை ஒருங்கிணைப்பது, உயிர்மாய்ப்பைத் தவிர்க்க கூடுதல் பயிற்சி, தொழில்நுட்பம் அடிப்படையிலான தலையீட்டின் பயன்பாடு உள்ளிட்டவை அடங்கும்.
எடுத்துக்காட்டாக, உயர்மாடிக் கட்டடங்களின் மேலே அனுமதியின்றி செல்வதைக் கண்டறிய ‘இன்ஃபிராரெட் பீம்’ கதிர்வீச்சு பயன்படுத்தப்படலாம் என அந்த அறிக்கை கூறியது.
உலக உயிர்மாய்ப்பு தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்ய ஓராண்டு தேவைப்பட்டது.
நிபுணர்களுடன் நேர்காணல், குழு கலந்துரையாடல்கள், சிங்கப்பூரில் 500 பங்கேற்பாளர்களுடன் பொது கலந்தாலோசனை ஆகியவற்றை அது கருத்தில் கொள்கிறது.
தேசிய அளவிலான உயிர்மாய்ப்பு தவிர்ப்புத் திட்டம் கொண்டுள்ள 21 நாடுகளின் ஆய்வை அந்த வெள்ளை அறிக்கை சுட்டுகிறது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன், உயிரை மாய்த்துக்கொள்ளும் விகிதம் சரிந்ததை அந்த நாடுகள் அனைத்தும் கண்டறிந்தது. குறிப்பாக, ஆடவர்களிடையே அந்த விகிதம் குறைந்தது.
அந்த வெள்ளை அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக கருத்துரைத்த சுகாதார அமைச்சு, தேசிய மனநல சுகாதார அலுவலகத்தை அமைப்பதால் பங்காளித்துவ முயற்சிகளை மேலும் ஆக்ககரமாக ஒருங்கிணைக்க முடியும் என்றது.
பரிந்துரைகளில் பலவும் தன் திட்டங்களுடன் ஒத்துப்போவதாகக் கூறிய அமைச்சு, நடைமுறைகளும் பலவும் ஏற்கெனவே நடப்பில் உள்ளன அல்லது செயல்படுத்தப்படவுள்ளன என்றது.


