செந்தோசா தீவைச் சேர்ந்த நீர்ப்பகுதியில் சரக்குக் கப்பல், வெள்ளிக்கிழமை (ஜூன் 6) காலை வேளையில் காணப்பட்டது.
தஞ்சோங் கடற்கரைக்கு அருகே அந்தக் கப்பல் ஒதுங்கியிருந்ததாக ‘காயாக்ஏஷியா’ என்ற சுற்றுச்சூழல் சுற்றுலா அமைப்பு, ஏறத்தாழ காலை 7.30 மணிக்குத் தெரிவித்தது.
நீர்ப்பகுதியில் இடையூறாக நின்றுள்ள அந்தக் கப்பல், சுற்றியுள்ள தடுப்பு மிதவைகளைச் சேதப்படுத்தியதாக காயாக்ஏஷியா தெரிவித்தது.
இச்சம்பவத்தால் காயம் அல்லது தூய்மைக் கேடு ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று கடற்துறை, துறைமுக ஆணையம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்று இந்தச் சம்பவம் குறித்து செந்தோசாவின் நிர்வாகம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு குறிப்பிடுகிறது.
மார்க்கோ போலோ 802 என்ற அந்தக் கப்பலைச் சோதனைக்காக இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் இந்தோனீசியாவின் கொடியைத் தாங்கியிருப்பதாகவும் சிங்கப்பூருக்குக் காலை 10 மணிக்குச் சென்றடைய வேண்டியிருந்ததாகவும் கப்பல் நிறுவனமான மேர்ஸ்க் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிருபர்கள் சென்றபோது அந்தக் கப்பலை மேலும் நான்கு கப்பல்கள் இழுத்தவாறு காணப்பட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தை கடற்துறை, துறைமுக ஆணையம் விசாரித்து வருகிறது.
அண்மைய மாதங்களில் செந்தோசா நீர்நிலைகளில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு சம்பவங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.