சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் குழுத்தொகுதி (GRC) முறை 1988ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல இன சிங்கப்பூரில் சிறுபான்மை இனத்தவரும் தவறாமல் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் அந்த முறை உருவாக்கப்பட்டது.
உதாரணமாக, சிறுபான்மை இன வேட்பாளர்கள் தனித்தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாத நிலை ஏற்படின், நாடாளுமன்றத்தில் அந்த இனத்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போக வாய்ப்பு உண்டு.
ஒரு கட்சி அல்லது கூட்டணியைச் சேர்ந்த மூவர் முதல் ஆறு பேர் வரை ஓர் அணியாக ஒரு தொகுதியில் போட்டியிட குழுத்தொகுதி முறை அனுமதிக்கிறது. ஆனால், ஒவ்வோர் அணியிலும் சிறுபான்மை இனத்தவர் ஒருவராவது இடம்பெறுவது அவசியம்.
தொடக்கமாக, மூவர் அடங்கிய 13 குழுத்தொகுதிகள் அறிமுகம் கண்டன. மக்கள்தொகையின் அடிப்படையில் குழுத்தொகுதிகளின் எல்லைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இம்முறை, பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை மற்ற தொகுதிகளைக் காட்டிலும் அதிகமாகப் பெருகியதை தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு குறிப்பிட்டது.
தற்போதைய நிலவரப்படி, நால்வர் மற்றும் ஐவரைக் கொண்ட குழுத்தொகுதிகளே உள்ளன. 18 குழுத்தொகுதிகளில் 10 தொகுதிகள் ஐவர் அணிக்கானவை; 8 தொகுதிகள் நால்வர் அணிக்குரியவை. ஐவரைக் கொண்ட தொகுதிகளின் எண்ணிக்கை 11லிருந்து 10ஆகக் குறைக்கப்பட்டு, நால்வரைக் கொண்ட தொகுதிகளின் எண்ணிக்கை 6லிருந்து 8க்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஆக, குழுத்தொகுதிகள் மூலம் 82 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்.
தனித்தொகுதி எண்ணிக்கையில் 1 தொகுதி சேர்க்கப்பட்டு 15 ஆகி உள்ளது. ஒட்டுமொத்தமாக, இதுவரை 93 ஆக இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 97ஆக உயர உள்ளது. புதிதாக நால்வர் இணைகின்றனர். ஒவ்வோர் உறுப்பினரும் 28,384 வாக்காளர்களைப் பிரதிநிதிப்பர். கடந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை 28,510ஆக இருந்தது.
அதேபோல, ஒவ்வொரு குழுத்தொகுதியிலும் இடம்பெறும் சராசரி எம்.பி.யின் எண்ணிக்கை 4.56 எனக் குறைந்துள்ளது. 2001 மற்றும் 2006 தேர்தல்களில் 5.36 என இருந்த அந்த விகிதம், 2015 தேர்தலில் 4.75ஆகவும் 2020 தேர்தலில் 4.65 ஆகவும் படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய 18 குழுத்தொகுதிகளில் ஐந்து புதியவை. பாசிர் ரிஸ்-சாங்கி, பொங்கோல், ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக், மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ், வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் ஆகியன அவை.