தூய எரிசக்தித்துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் அந்தக் காலகட்டத்தில் அத்துறையின் ஊழியரணி 60 விழுக்காடு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வர்த்தகத் தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார மாநாட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) வெளியிட்டார்.
சூரியத் தகடு, எரிசக்தி சேமிப்பு கட்டமைப்பு, குறைந்த கரிமம் கொண்ட மின்சார இறக்குமதி உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உருவாகும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்ற இலக்கைப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டு செல்வதில் உறுதியாகவுள்ளது. அதனால் தூய எரிசக்தித்துறைக்கு அது முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
சிங்கப்பூரில் வெளியாகும் மொத்த கரிம வெளியேற்றத்தில் மின்சாரத் துறை மட்டும் கிட்டத்தட்ட 40 விழுக்காடு கரிமத்தை வெளியேற்றுகிறது. இதனால் இத்துறையில் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சூரியத் தகடுகள்மூலம் மின்சாரத்தை உருவாக்குவது, தூய மின்சாரத்தை இறக்குமதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
“தூய எரிசக்தித்துறை தொடர்ந்து விரிவடைகிறது, அதனால் அதில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நமது எரிசக்தித்துறை உருமாறுகிறது, அதில் வேலை செய்யப் புதிய திறன்கள் தேவைப்படும்,” என்று திரு கான் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்காலத்தில் சூரிய சக்தித் தகடுகளின் வடிவமைப்பு, செயல்திறன் பொறியாளர்கள், சிறப்பு வடிவமைப்பாளர்கள், செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளுக்கு ஆள்கள் தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.
தற்போது சிங்கப்பூர் எரிசக்தித் துறை இயற்கை எரிவாயுவைப் பெரிய அளவில் நம்பியுள்ளது. சிங்கப்பூர் அதற்கான இயற்கை எரிவாயுவை அண்டை நாடுகளிடம் இருந்தும் உலக நாடுகள் பலவற்றிடம் இருந்தும் திரவ நிலையில் வாங்குகிறது.

