சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் (பிஎஸ்ஏ) துவாஸ் துறைமுகம், 2022 செப்டம்பர் மாதம் செயல்படத் தொடங்கியதிலிருந்து 25 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டுள்ளது. 20 அடி நீளமுள்ள வழக்கமான கப்பல் கொள்கலன்கள் அவை.
இது உலகின் மிகப்பெரிய, முழுமையான தானியக்கக் கொள்கலன் முனையத்தின் தொடர் வளர்ச்சியைக் காட்டுகிறது.
சரக்குகளைக் கையாள்வது தொடர்பான இந்த மைல்கல் சிங்கப்பூரின் அடுத்த தலைமுறைப் பெருந்துறைமுகத்தின் சாத்தியக்கூறுக்கான முக்கியச் சான்றாக அமைகிறது.
உலக அளவில் விநியோக நடவடிக்கைகளில் நெருக்கடிகள் நிலவுகின்றன. கப்பல் பாதைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வட்டாரத் துறைமுகங்களுக்கு இடையே கடும்போட்டி உள்ளது.
இந்தச் சூழலில், துவாஸ் துறைமுகம் தனது அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலமும் தானியக்கக் கட்டமைப்புகளின் மூலமும் சரக்குகளைக் கையாளும் வேகத்தை அதிகரித்துள்ளது.
துவாஸ் துறைமுகம் தற்போது 14 கப்பல் தளங்களுடன் இயங்கி வருகிறது. திட்டமிட்டபடி 2027ஆம் ஆண்டிற்குள் இது 18க்கு விரிவுபடுத்தப்படும் என்றும் பிஎஸ்ஏ வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தெரிவித்தது.
“உலகளாவிய வர்த்தக முறைகள் பெருஞ்சிக்கலாகி வரும் சூழலில், துறைமுகங்களுக்கும் விநியோக நிலையங்களுக்கும் இடையில் வலுவான ஒருங்கிணைப்பு முன்னெப்போதையும்விட இப்போது மிகவும் அவசியமாகிவிட்டது,” என்று பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஓங் கிம் போங் கூறினார்.
கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் வட்டாரத்திலும் உள்ள துறைமுகங்களுக்குச் செயல்திறனையும் கொள்ளளவையும் அதிகரிக்க, 2025ஆம் ஆண்டுக்கும் 2040க்கும் இடையில் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படும் என்று கூறப்பட்டது. ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்ட உலக வங்கி ஆய்வொன்றில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கொள்கலன் வர்த்தக வளர்ச்சி ஆண்டுக்கு 3.5 முதல் 4 விழுக்காடு என்ற அளவில் நீடித்தால், 2040க்குள் கொள்ளளவை 300 மில்லியன் கொள்கலன்களாக இரட்டிப்பாக்க, மொத்தம் 90 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது ஆண்டுக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படும்.
சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா ஆகியவற்றில் உள்ள துறைமுகங்களுக்கு மொத்த மூலதனத்தில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு தேவைப்படும்.


