உலகளாவிய விமானப் போக்குவரத்தின் வளர்ச்சி தற்செயலானதல்ல: ஜெஃப்ரி சியாவ்

உலகளாவிய விமானப் போக்குவரத்தின் வளர்ச்சி தற்செயலானதல்ல: ஜெஃப்ரி சியாவ்

படம்: சாவ்பாவ்

02 Feb 2026 - 6:41 pm

2 mins read

பாதுகாப்புடனும் துரிதமாகவும் செயல்படும் ஆற்றலை மேம்படுத்த, அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சமூகம் தொடர்ந்து மிக அணுக்கமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) தெரிவித்தார்.

குறிப்பாக, நிச்சயமற்ற நிலையில் இருக்கும் உலகில் இது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை நடைபெறும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சிக்கு முன்னதாக, சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் சாங்கி விமானப் போக்குவரத்து உச்சநிலை மாநாடு நடைபெற்றது.

மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட இந்த உச்சநிலை மாநாட்டில் திரு சியாவ் பேசினார்.

விதிமுறைகள் அடிப்படையிலான அனைத்துலக அணுகுமுறை மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.

தேசியவாதக் கொள்கைகளால் இந்த நிலை ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், இத்தகைய போக்கைத் தவிர்க்க வேண்டும் என விமானப் போக்குவரத்தின் வரலாறு நினைவூட்டியிருப்பதைத் திரு சியாவ் சுட்டினார்.

“உலகளாவிய விமானப் போக்குவரத்தின் வளர்ச்சி தற்செயலானதல்ல. பொதுவான விதிமுறைகள், அனைத்து நாடுகளையும் இணைக்கும் தரநிலை, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பின்பற்ற இணக்கம் காணப்பட்டதால் அது வளர்ச்சி கண்டது,” என்றார் அமைச்சர் சியாவ்.

உலகளாவிய விமானப் போக்குவரத்து தரநிலை, நடைமுறைகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் வலுவான ஆதரவாளராக சிங்கப்பூர் இருந்து வருவதை திரு சியாவ் சுட்டினார்.

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் வளர்ச்சி அடைய அந்த அமைப்பு வாய்ப்புகளை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துத் துறைக்கான தரநிலை, பல்வேறு விதிமுறைகள் போன்றவற்றின் மூலம் வாய்ப்புகளை அது வழங்கியதாகத் திரு சியாவ் கூறினார்.

50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 அரசாங்க மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைத் தலைவர்கள் உட்பட சுமார் 400 பேருக்கு ஆற்றிய உரையை நிறைவு செய்த திரு சியாவ், நவீன விமானப் போக்குவரத்தின் வெற்றி அனைத்துலக ஒத்துழைப்பு, பொதுவான விதிகள், பாதுகாப்பு, இணைப்பு, புத்தாக்கத்துக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பைச் சார்ந்துள்ளது என்றார்.

குறிப்புச் சொற்கள்
விமானப் போக்குவரத்துபோக்குவரத்துதரநிலை