சிங்கப்பூரில் வளர்ந்து, பின்னர் பதினாறு வயதில் நேப்பாளம் திரும்பிய பெண் ஒருவர், சிங்கப்பூர் மீது தமக்குள்ள ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், தம்மைப் போன்ற கூர்க்கா படையினரின் குடும்பத்தினருக்கும் சிங்கப்பூர்க் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
சிங்கப்பூர்க் காவல்துறைக்கு வலுச்சேர்க்கும் கூர்க்கா படைப்பிரிவில், நேப்பாளத்தின் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுகின்றனர். 1949ல் உருவாக்கப்பட்ட இந்தப் படை, ஜூன் 2018ல் நடந்த டிரம்ப் - கிம் சந்திப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டது.
கூர்க்கா வீரர்கள் நடுநிலையான மனப்பான்மைக்க்கும் கடமையுணர்வுக்கும் பெயர்பெற்றவர்கள்.
வீரர்களுடனான ஒப்பந்தத்தின்படி, சிங்கப்பூரில் 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சேவைக்குப் பிறகு அவர்கள் நேப்பாளம் திரும்ப வேண்டும். தற்போது அந்தப் படையில் அதிகாரிகளாகக் கிட்டத்தட்ட 1,800 பேர் பணியாற்றுவதாக 2018ல் வெளிவந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சிங்கப்பூரில் வளர்ந்த தமது அனுபவத்தை ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் வழியாகப் பகிர்ந்த ஜூல்ஸ் தாபா, ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகு நேப்பாளம் திரும்பும் கட்டாயத்தில் இருந்ததாகக் கூறினார். நேப்பாளம் திரும்பிய முதல் சில ஆண்டுகள் சவாலாக இருந்ததாகக் குறிப்பிட்ட ஜூல்ஸ், சிங்கப்பூரில் தாம் உணர்ந்த பாதுகாப்புக்காக நன்றியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தமது இளம்பருவத்தைக்கழித்த பிள்ளைகளை, வலுக்கட்டாயமாகச் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்குப் பதிலாக வேறு ஏதேனும் நியாயமான தீர்வு தேவைப்படுவதாக அவர் கூறினார். “சிங்கப்பூர் எங்கள் மனத்திற்கு நெருக்கமானது. மற்ற சிங்கப்பூரர்களைப் போலவே நாங்களும் இந்த நாட்டின் மீது அன்பு கொண்டுள்ளோம். அவர்களது எண்ணங்களைப் போலவேதான் எங்களது எண்ணங்களும் இருக்கின்றன,” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.
ஜூல்ஸின் இந்த நிலை குறித்து இணையவாசிகள் பலர் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.


