மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததாக இந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ 1965ல் அறிவித்த பிறகு, அதே ஆண்டில் செப்டம்பர் 12ஆம் தேதி அவர் பொது வெளியில் முதல் முறையாகத் தோற்றமளித்தார். செம்பவாங்கில் முன்னதாக இருந்த ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்ல வளாகத்தில் அது நடைபெற்றது.
“ஒருபோதும் அஞ்ச வேண்டாம்,” என்று அவர், உரத்த குரலில் அனைத்து சிங்கப்பூரர்களிடம் கூறினார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகும் நெகிழ்வூட்டும் அந்தத் தருணம் மறக்கப்படவில்லை. மாறாக, அதனை மையமாக வைத்தே இந்நாட்டின் 60ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தையொட்டி ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் சமய நல்லிணக்க கலந்துரையாடல் அங்கம் ஞாயிற்றுக்கிழமை (7 செப்டம்பர்) இடம்பெற்றது.
‘மனித குலத்தின் ஒருமைப்பாடு’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அந்தக் கலந்துரையாடலில் வெவ்வேறு சமய நல்லிணக்க அமைப்புகளைச் சேர்ந்த அறுவர் கலந்துகொண்டனர்.
கத்தோலிக்க சமூகநல சேவைகள், ரென் சி மருத்துவமனை, ஜாமியா சிங்கப்பூர், ராமகிருஷ்ண மிஷன், தாய் ஹுவா குவான் மோரல் சங்கம், ஸ்ரீ நாராயண மிஷன் அறங்காவலர் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
சமய நல்லிணக்க நிபுணர் நஸ்ஹத் ஃபஹிமா கலந்துரையாடலை வழிநடத்தினார்.
ஸ்ரீ நாராயண குருவின் 171வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை 171வது குரு ஜெயந்தி கொண்டாட்டம் இடம்பெற்றது.
சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் சவால்கள், அவை கடைப்பிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு, பயனாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவது போன்ற விவகாரங்கள் குறித்து, கலந்துரையாடலில் கருத்துகள் பகிரப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கலந்துரையாடலுக்குப் பிறகு கொண்டாட்ட அங்கத்தில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஆகியவற்றின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளையும், கொள்கைகளையும் போற்றும் நன்னாளான இந்நாள், நம் நாட்டின் பயணத்துடனும் இணைந்துள்ளது. நமது பின்னணி எதுவாக இருந்தாலும் நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக உள்ளோம். இந்தக் கலந்துரையாடல் அனைத்துச் சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் தளமாகவும் இருந்தது,” என்றார் திருவாட்டி கோ.
ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் பணிபுரியும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை கல்வி நிதியுதவி வழங்கவுள்ளது. அதற்காக, அவ்விரு அமைப்புகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
“நாராயண குருவின் போதனைகள் சமயத்திற்கு அப்பாற்பட்டவை. சமூகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் நாராயண குரு அப்போதனைகளைச் செயல்களாக மாற்றினார். சமய நல்லிணக்கக் கலந்துரையாடல் மூலம் குருவின் போதனைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தை நாங்கள் வைத்திருந்தோம்,” என்று ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் முன்னாள் தலைவரான ஜெயதேவ் உன்னிதன் தெரிவித்தார் .
“ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் குரு ஜெயந்தி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறோம். குருவின் போதனைகளுக்கு நமது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது இதன் நோக்கம். குரு ஜெயந்திக்கு அப்பாற்பட்டு 1965ஆம் ஆண்டின் உணர்வையும் பறைசாற்றுகிறது இந்தக் கொண்டாட்டம். நமது இன நல்லிணக்கமும், சகிப்புத்தன்மையும் சிங்கப்பூரின் பொக்கிஷம்,” என்று குறிப்பிட்டார் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.தேவேந்திரன்.

