ஜிஎக்ஸ்எஸ் மின்னிலக்க வங்கி, அதனிடம் பணிபுரியும் 82 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கிறது.
இந்த எண்ணிக்கை, அந்நிறுவனத்தின் ஊழியர்களில் 10 விழுக்காடாகும். ஜிஎக்ஸ்எஸ், கிராப் ஹோல்டிங்ஸ், சிங்டெல் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
ஆட்குறைப்பு குறித்து ஜிஎக்ஸ்எஸ் வங்கியின் தலைமை நிர்வாகி லாய் பெய்-சி புதன்கிழமை (டிசம்பர் 3) அந்நிறுவனத்தின் ஊழியர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
தான் செயல்படும் மூன்று சந்தைகளிலும் ஜிஎக்ஸ்எஸ் உத்திபூர்வ மறுஆய்வு செய்த பிறகு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஜிஎக்ஸ், ஜிஎக்ஸ்பேங்க் (GXBank) என்ற பெயரில் மலேசியாவில் ஒரு மின்னிலக்க வங்கிக் கிளையையும் இந்தியாவில் ஒரு தொழில்நுட்ப நிலையத்தையும் நடத்துகிறது.
ஜிஎக்ஸ்எஸ், மலேசியாவில் தனது ஊழியர் பலத்தை சீராக்கியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அந்த வகையில், அங்கு காலியான வேலைகள் மறுபடியும் நிரப்பப்படவில்லை.
எனினும், மற்ற இரு சந்தைகளிலும் ஊழியர் பலத்தைச் சீராக்கும் பணிகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட மெதுவாக நடந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜிஎக்ஸ்எஸ், அதன் செயல்பாடுகளைச் சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக திருவாட்டி லாய் தெரிவித்தார்.
வட்டார அளவில் ஜிஎக்ஸ்எஸ் அதன் வர்த்தகத்தை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக திருவாட்டி லாய் குறிப்பிட்டார். கவனம், வங்கியைக் கட்டமைக்கும் நிலையிலிருந்து அதை நடத்தும் பணிகளுக்கு மாறி வருவதாக அவர் சொன்னார்.

