சிங்கப்பூரில் ஆய்வு நிலையத்தைத் திறந்தது பிரிட்டனின் மருந்து நிறுவனம்

சிங்கப்பூரில் ஆய்வு நிலையத்தைத் திறந்தது பிரிட்டனின் மருந்து நிறுவனம்

ஆண்டுக்கு $100 மில்லியன் முதலீடு
படம்: ஹேலியன்

25 Nov 2026 - 7:46 pm

2 mins read

ஆசிய பயனீட்டாளரின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய மருந்துகளைத் தயாரிக்கும் நோக்கில், பிரிட்டனின் ‘ஹேலியன்’ நிறுவனம் சிங்கப்பூரில் தனது எதிர்காலச் சுகாதாரப் புத்தாக்க நிலையத்தைப் புதன்கிழமை (நவம்பர் 25) தொடங்கியுள்ளது.

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் மூலம், ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் ஆய்வு, புத்தாக்கப் பணிகளுக்காக ஹேலியன் ஆண்டுதோறும் 100 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக முதலீடு செய்யவுள்ளது. 2022ல் ‘ஜிஎஸ்கே’ நிறுவனத்திலிருந்து பிரிந்து லண்டன், நியூயார்க் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள ஹேலியன் நிறுவனம், பனடோல், அட்வில், சென்சோடைன் ஆகிய பிரபலத் தயாரிப்புகளுக்குப் பெயர்பெற்றது.

சென்சோடைன் போன்ற வாய் நல மருந்துகள், சென்ட்ரம், கால்ட்ரேட் முதலிய உடல்நல மருந்துகளின் ஆய்வில் புதிய நிலையம் கூடுதல் கவனம் செலுத்தும்.

ஆசிய மக்களுக்கான அறிவியல்பூர்வமான மருந்துகளை உருவாக்கப் பயனீட்டாளர் தரவுகள், அறிவியல் நிபுணத்துவம், மின்னிலக்கத் திறன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஏஸ்டார் ஆகியவற்றுடனும் ‘அமிலி’, ‘கிரே மேட்டர் சொல்யூஷன்ஸ்’ போன்ற உள்ளூர் நிறுவனங்களுடனும் ஹேலியன் இணைந்து பணியாற்றும்.

நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட அவற்றைத் தடுப்பதில் சிங்கப்பூர் கவனம் செலுத்தி வருவதாகத் தொடக்க விழாவில் பேசிய சுகாதார, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார்.

ஆய்வாளர்கள், பொதுத்துறை, தனியார் துறைகளை ஒன்றிணைத்துப் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வலுவான சுகாதாரத் துறை சார்ந்த சூழலைச் சிங்கப்பூர் கொண்டுள்ளது. ஆசியாவின் தேவைகளுக்கேற்ப உருவாகும் நடைமுறைத் தீர்வுகளால், எத்தனை பேர் உடல்நலமான, சுதந்திரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதே உண்மையான வெற்றியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசிய-பசிபிக் தலைமையகமாகச் சிங்கப்பூர் செயல்படுகிறது என்றும் 2030க்குள் ஒரு பில்லியன் புதிய பயனீட்டாளர்களைச் சென்றடையும் உலகளாவிய இலக்கிற்கு இவ்வட்டாரம் முக்கியப் பங்காற்றும் என்றும் ஹேலியன் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தலைவர் டாக்டர் கீத் சோய் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வலுவான புத்தாக்கச் சூழலை ஹேலியனின் இந்த முதலீடு பிரதிபலிப்பதாக பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ஹோ வெங் சி கூறினார்.

குறிப்புச் சொற்கள்