இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளோடு நின்றுவிடாமல் கொவிட்-19 கிருமித்தொற்றால் தங்களுக்கு முடி உதிரும் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதாக பலர் பகிர்ந்து வருகின்றனர்.
'கொவிட்-19 தொடர்பான முடி உதிர்வு' என்ற இந்தப் புதுப் பிரச்சினை குறித்து உலகின் பல்வேறு மருத்துவ ஏடுகளில் நன்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முடி உதிரும் பிரச்சினைக்காக தங்களை நாடிவரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, கொள்ளைநோய் காலகட்டத்தில் அதிகரித்துள்ளதாக மூலிகை மருத்துவ முடி பராமரிப்பு நிலையத்தின் நிறுவனர் ஒருவர் கூறியுள்ளார்.
கொவிட்-19 தொற்று, அறுவை சிகிச்சை, குழந்தைப் பிறப்பு அல்லது உடலுக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு கடுமையான நிகழ்வுக்குப் பின் சிலருக்கு இதுபோன்ற முடி உதிர்வு தற்காலிகப் பிரச்சினையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வழக்கமான முடி வளர்ச்சி, இக்கடுமையான நிகழ்வுகளால் பாதிக்கப்படலாம். கொவிட்-19 ஏற்பட்டு நான்கு வாரங்களுக்குள் இந்த முடி உதிர்வு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இணையத்தில் பார்த்துவிட்டு இஞ்சி, காப்பித் தூள், தேங்காய் எண்ணெய், முட்டை என மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படாத வைத்தியங்களைச் செய்து பார்க்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

