போதைப்பொருள் தொடர்புடைய சாலை விபத்து: பாதி சம்பவங்களில் மரணம்

2023 முதல் 2025 வரை 38 சாலை விபத்துகள். அவற்றில் 19ல் உயிரிழப்பு

போதைப்பொருள் தொடர்புடைய சாலை விபத்து: பாதி சம்பவங்களில் மரணம்

2 mins read
2f45ba82-759e-4db4-80d7-1a08568603f6
போதைப்பொருள் மற்றும் எட்டோமிடேட் பயன்பாட்டுடன் தொடர்புடைய சாலை விபத்துகள் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகக் காவல்துறை வழங்கிய சம்பவங்களின் விவரங்கள் காட்டுகின்றன. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

2023க்கும் 2025க்கும் இடைப்பட்ட காலத்தில், போதைப்பொருள் மற்றும் எட்டோமிடேட் பயன்பாடு தொடர்பான 38 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 19 விபத்துகள் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்கு புதன்கிழமையன்று (மே 20) பதிலளித்த காவல்துறை, அந்த 19 விபத்துகளில், ஒன்பது எட்டோமிடேட் பயன்பாடு தொடர்புடையவை என்றும் மீதமுள்ள 10 விபத்துகள் போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையவை என்றும் கூறியது.

எட்டோமிடேட் என்பது ‘கேபாட்ஸ்’ எனப்படும் மின்னணு ஆவியாக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மயக்க மருந்து ஆகும்.

போதைப்பொருள் மற்றும் எட்டோமிடேட் பயன்பாட்டுடன் தொடர்புடைய சாலை விபத்துகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதை, காவல்துறை வழங்கிய சம்பவங்களின் விவரங்கள் காட்டுகின்றன.

அந்த 38 சம்பவங்களில், இரண்டு 2023ஆம் ஆண்டிலும், ஏழு 2024ஆம் ஆண்டிலும், இருபத்தொன்பது 2025ஆம் ஆண்டிலும் பதிவாகியுள்ளன.

எட்டோமிடேட் தொடர்புடையவை

2023ஆம் ஆண்டின் சம்பவங்களில் எட்டோமிடேட் சம்பந்தப்படவில்லை. அதேசமயம் 2024ஆம் ஆண்டின் சம்பவங்களில் ஒன்றில் மட்டுமே எட்டோமிடேட் சம்பந்தப்பட்டிருந்தது.

ஆனால் 2025ல், 18 சம்பவங்களில் எட்டோமிடேட் சம்பந்தப்பட்டிருந்தது. அந்த ஆண்டில், அந்த 18 சம்பவங்களில் ஏழில், போதைப்பொருளும் எட்டோமிடேட்டும் ஒன்றாகப் பயன்படுத்தப்படும் ஒரு புதிய போக்கு கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் தற்போது புலனாய்வு மற்றும் விசாரணை தொடர்பில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.

போக்குவரத்து விபத்துகள் மின்சிகரெட் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்து பிப்ரவரியில் நாடாளுமன்றக் கேள்வி ஒன்றை திருமதி வேலரி லீ (பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி) எழுப்பினார்.

“ஒரு போக்குவரத்து விபத்தின்போது போதைப்பொருள் அல்லது எட்டோமிடேட் பயன்பாட்டைப் போக்குவரத்துக் காவல்துறை சந்தேகித்தால், ரத்தப் பரிசோதனை தேவைப்படும்,” என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா.சண்முகம் அதற்குப் பதிலளித்தார்.

போதையில் வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தினால், அதற்கான தண்டனைகள் ஏற்கெனவே கடுமையாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துமின்சிகரெட்போதைப்பொருள்