தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோயாளிகளின் சுவாச முறையைக் கண்காணிக்கும் கையடக்கக் கருவி

3 mins read
744f0705-e3af-4227-be6f-3d9f7d8433dd
விருதுபெற்ற குழுவினருடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதயம், நுரையீரல் கோளாறுகள் உள்ளிட்ட பல நீண்டகால பிரச்சினைகள் உடைய நோயாளிகளின் சுவாசத்தைக் கண்காணிக்கும் நவீனக் கருவியை வடிவமைத்ததற்காக ஏஸ்டார் ஆய்வகத்தைச் (A*Star Skin Research Labs) சேர்ந்த பேராசிரியர் மாலினி ஒலிவோ, டாக்டர் குர்பிரீத் சிங் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவுக்கு தொழில்நுட்பத்துக்கான அதிபர் விருது வழங்கப்பட்டுள்ளது.

‘ரெஸ்பிரீ’ (Respiree) என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தின்கீழ் பயோபோடோனிக்ஸ், இயந்திரக் கற்றல், மருத்துவத் தரவுகளின் ஒருங்கிணைப்பு ஆகிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி நோய் மேலாண்மை அனுபவத்தை மேம்படுத்தும் கருவியை வடிவமைத்துள்ளனர் இக்குழுவினர்.

காதுகேள் பொறி அளவே உள்ள இந்தச் சிறு கருவி, நோயாளிகளின் மார்புப் பகுதியில் பொருத்தப்பட்டால், அவர்களது சுவாச முறை, வேகம் உள்ளிட்ட இன்றியமையாத அறிகுறிகளைக் கண்காணித்து மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த தரவுகளை வழங்கும்.

இதுவரை இவ்வகை கண்காணிப்புகளை மேற்கொள்ள மார்புப் பகுதியைச் சுற்றி பெரிய பட்டி பொருத்தப்பட்டு வந்தது. அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் பெரிய கருவிகள் பொருத்தி கண்காணிக்கப்படும். இந்தக் கருவி அதை எளிதாக்கும் என்றனர் ஆய்வுக் குழுவினர்.

“பல்வேறு நோய்களின் தீவிரத்தை சுவாச முறை கொண்டு கணிக்க முடியும். தற்போதுள்ள முறைபடி நோய் மோசமடையும் நிலையை ஏறத்தாழ நான்கு முதல் ஆறு மணி நேரம் முன்பு கண்டறிய முடிகிறது. இந்த கையடக்கக் கருவி மூலம் தொடர்ந்து கண்காணிப்பதாலும் ஒருங்கிணைந்த தரவுகள் கிடைப்பதாலும் நோய் மோசமடைவதைக் குறைந்தது 12 முதல் 18 மணி நேரம் முன்பு கணிக்க முடியும்,” என்றார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த டாக்டர் குர்பிரீத் சிங்.

தவிர, இது பொருத்தப்பட்டுள்ள நோயாளிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டால் ஒலி எழுப்பி உணர்த்தும். இது தூங்கும் நேரத்திலும் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகாமல் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் கவனம் செலுத்த உதவுகிறது என்றனர் இக்குழுவினர்.

இத்திட்டம் ஒரு கூட்டு முயற்சி என்று சொன்ன பேராசிரியர் மாலினி, “ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குமேல் குழுவினர் செய்த விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இந்த விருது,” என்றார்.

வெளியில் அறியப்படாத துறைக்கு விருது கிடைத்திருப்பது, இத்துறைகளில் உள்ள மேலும் பல சாத்தியக் கூறுகளை ஆராய ஊக்குவிக்கும் என்றும் சொன்னார்.

“செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை எல்லாத் துறைகளிலும் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. அது சுகாதாரத் துறைக்கு இன்றியமையாதது. சுகாதாரத் துறையில் செய்யப்படும் முன்னேற்றங்களும் புத்தாக்கமும் உயிர்களைக் காக்கும்,” என்றார் இத்திட்டத்தை வழிநடத்திய பேராசிரியர் மாலினி.

தொழில்நுட்பத்துக்கான அதிபர் விருது

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியோருக்கான அதிபர் விருதுகள் வழங்கும் விழா நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இவ்விழாவில் நால்வருக்கு இளம் ஆய்வாளர்கள் விருது வழங்கப்பட்டது.

ஒருவருக்கு அறிவியலுக்கான அதிபர் விருதும் ஒரு குழுவுக்கு தொழில்நுட்பத்துக்கான அதிபர் விருதும் இருவருக்கு அறிவியல், தொழில்நுட்பப் பதக்கமும் வழங்கப்பட்டன.

இதில் பங்கேற்றுப் பேசிய துணைப் பிரதமரும் தேசிய ஆய்வு அறநிறுவனத் தலைவருமான திரு ஹெங், அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் புதிய ஆய்வுகளையும் திறமைகளையும் மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் நடந்து வருவதைச் சுட்டினார்.

அனைத்துலக அளவில் சிறந்த ஆய்வாளர்களையும் நிபுணர்களையும் உள்ளூர் நிபுணர்களுடன் இணைத்து வளமான ஆய்வுச் சூழலை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.

இவை, அனைத்துலக அளவில் நிலவும் சவால்களுக்குத் தீர்வுகாணவும் தொழில்நுட்பப் புத்தாக்கங்களுக்கு ஆசிய முனையமாக சிங்கப்பூர் திகழ வேண்டும் எனும் குறிக்கோளை நோக்கியும் எடுத்துச் செல்லும் என்றார் அவர்.

“விருதுபெற்ற நிபுணர்களின் பயணம் மேலும் பலரை அறிவியல் தொழில்நுட்பப் பாதையில் பணியாற்றி முன்னேற ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்