கட்சிக்காரரின் பணத்தைக் கையாண்ட விதம்: லிம் தியெனுக்கு $30,000 அபராதம்

கட்சிக்காரரின் பணத்தைக் கையாண்ட விதம்: லிம் தியெனுக்கு $30,000 அபராதம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Apr 2026 - 8:14 pm

2 mins read

எதிர்க்கட்சி அரசியல்வாதியும் வழக்கறிஞருமான லிம் தியெனுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

மூவர் அடங்கிய நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்கியது.

கட்சிக்காரருக்குச் சொந்தமான 30,000 வெள்ளி காசோலையை அவர் தவறுதலாகக் கையாண்டதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து அவரது பெயரை நீக்க வேண்டும் என்று சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் கேட்டுக்கொண்டது.

ஆனால் லிம்மோ, மிகச் சிறிய தொகையை அபராதமாக விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 10ஆம் தேதி எழுத்துபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பில், லிம் மீது நேர்மையின்மைக்கான எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால் இந்த வழக்கில் அபராதம் விதிப்பதே பொருத்தமான ஒழுங்கு நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2019ல் சட்டத் தொழில் விதிகளின்படி வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காகத் தனி கணக்கில் வைப்பதற்குப் பதிலாக லிம் அந்தக் காசோலையைத் தனது நிறுவனமான கார்சன் லா சேம்பர்சின் அலுவலகக் கணக்கில் சேர்த்து இருந்தார்.

அந்தக் காசோலை, ஒரு சாலை விபத்து இழப்பீட்டு வழக்கில் அவரது கட்சிக்காரரான திரு. சுரேஷ் குமார் ஏ. ஜெசுபாலுக்கு வழங்கப்பட்ட இடைக்காலப் பணமாகும்.

திரு லிம், 61, இரண்டு குற்றச்சாட்டுகளில் முறையற்ற நடத்தையைக் கண்டறிந்த ஒழுங்குமுறை விசாரணை மன்றம், 2023 ஆகஸ்டில் நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்தது.

ஆனால் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதி டே யோங் குவாங், நீதிபதி ஆண்ட்ரு பாங் ஆகியோர் அடங்கிய அமர்வு முதல் குற்றச்சாட்டுக்கான தண்டனையை ரத்து செய்தது.

இரண்டாவது குற்றச்சாட்டில் மட்டும் லிம்முக்கு அது அபராதம் விதித்தது.

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம், அவர் மீதான முதல் குற்றச்சாட்டை சந்தேகமின்றி நிரூபிக்கவில்லை என்று அமர்வு கூறியது.

சங்கத்திடம் புகார் அளித்த சுரேஷ் பின்னர் சாட்சியமளிக்க மறுத்துவிட்டதால் ஆவணங்களை மட்டுமே நம்பி அது நிரூபிக்க முயற்சி செய்தது.

திரு சுரேஷ் 2019 நவம்பர் 13ஆம் தேதி மற்றொரு வழக்கறிஞரை நியமித்த பிறகும் காசோலையை லிம் தியென் தமது அலுவலக வங்கிக் கணக்கில் சேர்த்தது முதல் குற்றச்சாட்டு என்றும் கட்சிக்காரரின் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கத் தவறியது இரண்டாவது குற்றச்சாட்டு என்றும் சங்கம் கூறியிருந்தது.

கார்சன் லா சேம்பர்ஸ் பெயருக்கு வழங்கப்பட்ட அந்தக் காசோலை, மறுநாள் நவம்பர் 14ஆம் தேதி வங்கியில் சேர்க்கப்பட்டது.

திரு சுரேஷ் தன்னுடைய அனுமதியில்லாமல் இது செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்
வழக்குஎதிர்க்கட்சிஅரசியல்வழக்கறிஞர்

தொடர்புடைய செய்திகள்