ரோஹ்தக்: தமது மனைவியின் காதலனை உயிருடன் புதைத்தவரும் அவருக்கு உதவி செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம். அங்கு யோகா ஆசிரியராக வேலை செய்த ஜக்தீப், 45, என்பவர் டிசம்பர் 24ஆம் தேதி மாயமானார். அவர் கொல்லப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் பரவின.
அதையடுத்து, காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடினர். இறுதியில், மூன்று மாதங்களுக்குப் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை ஜக்தீப்பின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “பிப்ரவரி 3ஆம் தேதி ஜக்தீப் மாயமானதாக சிவாஜி காலனி காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.
“புகாரின்பேரில் ஜக்தீப்பை கடந்த மூன்று மாதங்களாகத் தேடி வந்தோம். இறுதியாக, ஜக்தீப்பின் கைப்பேசி அழைப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
“அத்துடன், காவல்துறை தனிப்படைக்குக் கிடைத்த ரகசிய தகவல்களின்படி ஜக்தீப்பைக் கொன்ற சந்தேகத்தில் ஹர்தீப், தரம்பால் ஆகிய இருவரையும் கைது செய்தோம்
“அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு உண்மைகள் வெளியே வந்தன.
தொடர்புடைய செய்திகள்
“ஜக்தீப் வாடகை வீட்டில் வசித்து வந்தபோது அதே வீட்டில் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை அறிந்த பெண்ணின் கணவரான ஹர்தீப், அந்த இருவரையுமே கண்டித்துள்ளார். ஆனால், கள்ளஜோடியின் உறவு தொடர்ந்து வந்துள்ளது. அதனால்தான், ஜகதீப்பை தீர்த்துக்கட்ட ஹர்திப் முடிவு செய்தார்.
“ஜக்தீப் வீட்டிற்குச் சென்ற ஹர்தீப்பும் அவரது நண்பர் தரம்பாலும் ஜக்தீப்பைக் கடுமையாகத் தாக்கி அவரது கை, கால்களைக் கட்டிப் போட்டு ரோஹ்தக்கிலிருந்து 61 கி.மீ. தூரத்திலுள்ள கிராமத்திற்கு காரில் கடத்திச் சென்றனர்.
“அங்குள்ள வயலில் ஏழு அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் ஜக்தீப்பை உயிருடன் மண்ணில் புதைத்துவிட்டார்கள்.
“கைதானவர்களின் வாக்குமூலத்தை பெற்ற நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏழு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஜக்தீப்பின் சடலத்தை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
“இந்தச் சம்பவத்தில் மேலும் இருவரைத் தேடி வருகிறோம்,” என்று கூறினர்.

