மின்னும் விளக்குகளுக்கும், உற்சாகமூட்டும் இசைக்கும், கடலென முழங்கிய கரகோஷத்துக்கும் இடையே, சிங்கப்பூரின் 60வது தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியை சீராக நடத்த பல தொண்டூழியர்கள் திரைக்குப் பின்னால் அமைதியாக உழைத்தனர்.
தொண்டூழியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இளம் தலைவர்
இரண்டாம் முறையாக தேசிய தின அணிவகுப்பு தொண்டூழியராக பங்கேற்ற பரமசிவம் சௌகாந்திகா, 17, இவ்வாண்டு ஒரு புதிய பொறுப்பை ஏற்றார்.
முதல்முறையாக 2023ல் ‘ஹார்ட்வேர் நெட்வொர்க்’ அமைப்பின் தொண்டூழியராக பணியாற்றிய அவர், இம்முறை அந்த அமைப்புடன் மீண்டும் இணைந்து தன்னார்வ குழு தலைவராக செயலாற்றினார்.
“பார்வையாளர்களுக்கான இருக்கைகள் சரிப்பார்பது, அவர்களை வரவேற்பது, பொருட்களை அன்பளிப்பு பைகளில் அடுக்கி வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு எனது குழுவினருக்கும் வழிகாட்டினேன்,” என்றார் அவர்.
தொண்டூழிய சேவை எப்போதும் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக கூறிய சௌகாந்திகா, இம்முறை தலைவராக பணியாற்றியது, அவருக்கு ஒரு புதுமையான அனுபவத்தை அளித்தது என்றார்.
“பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை கண்டபோது, என் உழைப்பின் மிகச் சிறந்த பலன் அதுவே என்பதை உணர்ந்தேன்,” என்றார் அவர்.
அணிவகுப்பில் சீருடை அணிகள் நடைபோட்ட காட்சி, தனது பள்ளி நாட்களின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் சௌகாந்திகா கூறினார்.
முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்ற தன்னார்வலர்
‘என்சூர் இன்ஜினியரிங்’ நிறுவனத்தில் கடை நிர்வாகியாக (store executive) பணிபுரியும் 30 வயதான விரமணி நடராஜன், இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் முதன்முறையாக தொண்டூழியராக பணியாற்றினார்.
சக நிறுவன ஊழியர்களுடன் சேர்ந்து புதிய அனுபவங்களைப் பெறும் நோக்கில் அவர் இந்தப் பணியில் ஈடுபட்டார். நிகழ்ச்சியின் தொடகத்தில் அரங்கத்தை சுத்தம் செய்வதும், பார்வையாளர்கள் வெளியேறிய பிறகு இருக்கைப் பகுதிகளைச் சுத்தம் செய்வதும், பொருட்களை அகற்றுவதும் அவரது பொறுப்பாக இருந்தது.
“தேசிய தின நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது. இசை, நடனங்கள், வாணவேடிக்கை அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நான் ஒரு சிறு பங்கு ஆற்றியதற்கு பெரும் திருப்தி அடைகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அவர், 2017ல் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த பிறகு, இங்குள்ள அழகு, திறமையான நிர்வாகம், ஒன்றுபட்ட மனப்பான்மை முதலியவற்றால் கவரப்பட்டதாக கூறினார்.