கைகுலுக்கல் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட கான் சியாவ் ஹுவாங்

2 mins read
3eb2759a-bc36-4a34-a28b-8cdd4f46a53d
சிவப்புச் சட்டை அணிந்த ஆடவருடன் கைகுலுக்க தாமதமானதற்கான காரணத்தைத் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார் வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங். - படங்கள்: இணையம்

கைகுலுக்கல் சம்பவம் தொடர்பாக வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவத்தைக் காட்டும் காணொளி அண்மையில் இணையத்தில் வலம் வந்தது.

டிக்டாக்கில் அக்காணொளி சனிக்கிழமை (ஜூன் 7) பதிவேற்றம் செய்யப்பட்டது. அதே நாளில் அக்காணொளியை 185,000க்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.

திருவாட்டி கான் காரிலிருந்து இறங்கியது அவரை எட்டு ஆடவர்கள் வரவேற்றதைக் காணொளி காட்டியது. வரவேற்ற ஆடவர்களில் ஒருவர் சிவப்பு நிறச் சட்டையை அணிந்திருந்தார்.

அந்த ஆடவர்களில் ஒருவருடன் திருவாட்டி கான் குலுக்கினார். சிவப்புச் சட்டை அணிந்த ஆடவர் திருவாட்டி கானின் கார் கதவை மூட உதவினார். பிறகு திருவாட்டி கானுடன் கைகுலுக்க தமது கையை நீட்டினார்.

ஆனால், அவருடன் கைகுலுக்குவதற்குப் பதிலாக வேறொருவருடன் திருவாட்டி கான் கைகுலுக்கினார்.

அதன் பிறகே சிவப்புச் சட்டை ஆடவருடனும் மற்றவர்களுடனும் அவர் கைகுலுக்கினார்.

இதனையடுத்து, திருவாட்டி கான் ஆணவத்துடன் நடந்துகொண்டதாக இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து தெளிவுபடுத்தினார் மேரிமவுண்ட் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி கான்.

சம்பவம் மே 17ஆம் தேதியன்று நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

பீஷான் வட்டாரத்தில் உள்ள பெக் சான் தெங்கில், பெக் சான் தெங் கலாசார விழாவில் தாம் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

விழாவுக்கு 155 ஆண்டு பழைமையான குவோங் வாய் சியூ பெக் சான் தெங் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கழகத்தை 16 கென்டனிஸ் குலவழிச் சங்கங்கள் நிர்வகிக்கின்றன.

பெக் சான் தெங்கிற்குத் தாம் சென்றது அதுவே முதல்முறையாகக் கூறிய திருவாட்டி கான், தம்மை வரவேற்க பலர் முன்வந்ததாகக் குறிப்பிட்டார்.

“காரிலிருந்து வெளியே வந்ததும் விழாவை ஏற்று நடத்துபவரை அடையாளம் காண முயன்றுகொண்டிருந்தேன். முதலில் அவரது கையைக் குலுக்கினேன். என்னை வரவேற்க, ஒரே நேரத்தில் பலர் திரண்டனர். சிவப்புச் சட்டை அணிந்த ஆடவருடன் கைகுலுக்க சற்று தாமதமாகிவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று திருவாட்டி கான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மன்னிப்புஇணையம்நாடாளுமன்ற உறுப்பினர்