வழக்கறிஞர்களுக்குத் தொல்லை தரும் வேலைச் சூழலை ஏற்கமுடியாது: சு‌ஷில் நாயர்

வழக்கறிஞர்களுக்குத் தொல்லை தரும் வேலைச் சூழலை ஏற்கமுடியாது: சு‌ஷில் நாயர்

2 mins read
8b25b1ba-f94b-4f27-9da2-e059b26d19cf
சிங்கப்பூர்ச் சட்டக் கழகம் நடத்திய இரண்டாம் சட்டத் துறைக் கருத்தரங்கில் தலைமை நீதிபதியாக அடுத்த ஆண்டு பொறுப்பேற்கவுள்ள திரு சு‌ஷில் நாயர் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழக்கறிஞர்கள் ஆரோக்கியமான, நிலையான வாழ்க்கைத்தொழிலைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதில் முனைப்புடன் இருப்பதாக அடுத்த ஆண்டு தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள திரு சு‌‌‌ஷில் நாயர் கூறியிருக்கிறார்.

வேலையிடத்திலோ நீதிமன்றத்திலோ துன்புறுத்தலையும் தொல்லைக்கு ஆளாவதையும் எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

திரு நாயர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாட்டின் ஐந்தாம் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார். சிங்கப்பூர்ச் சட்டக் கழகம் நடத்திய இரண்டாம் சட்டத் துறைக் கருத்தரங்கில் அவர் பேசினார். அதில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

சட்டத் துறையின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகத் திரு நாயர் சொன்னார். அதன் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களைத் தற்போதைய தலைமை நீதிபதி சுந்தரே‌‌ஷ் மேனனும் சட்ட அமைச்சர் எட்வின் டோங்கும் வழிநடுத்துவதை அவர் சுட்டினார்.

“இது உடனடி நடவடிக்கை தேவைப்படுகின்ற முக்கியமான பகுதி என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை உங்களிடம் உறுதியாகக் கூறுகிறேன். எனவே தலைமை நீதிபதியால் தற்போது திறம்பட முன்னெடுக்கப்படும் இந்த முக்கியப் பணி, தலைமை மாற்றத்திற்குப் பிறகும் எந்தத் தடங்கலுமின்றித் தொடரும் என்ற உத்தரவாதத்தையும் அளிக்கிறேன்,” என்றார் திரு நாயர்.

சட்டப் பணியில், குறிப்பாக உயர்நிலையில், அதிகக் கடின உழைப்புத் தேவைப்படுகிறது. இருந்தாலும், இளம் வழக்கறிஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பரிசீலிக்க வேண்டியது சட்ட நிறுவனங்களுடைய தலைவர்களின் கடமை என்று திரு நாயர் கூறினார்.

64 வயது மேனன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஓய்வுபெற உள்ளதாகப் பிரதமர் அலுவலகம் இம்மாதம் 17ஆம் தேதி அறிவித்தது.

62 வயது திரு நாயர், அவருக்குப் பிறகு தலைமை நீதிபதிப் பொறுப்பை ஏற்பார்.

குறிப்புச் சொற்கள்
தலைமை நீதிபதிவழக்கறிஞர்நீதிமன்றம்பகடிவதை