கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது தமது அண்டைவீட்டாருக்குத் தொல்லை விளைவித்ததற்காக 2022ஆம் ஆண்டில் அபராதம் விதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகத் தற்போது மீண்டும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
52 வயது லிம் சோக் லேக் என்ற அப்பெண்ணுக்குப் புதன்கிழமை (பிப்ரவரி 26) $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி லிம்மின் மகன் சீனப் பாரம்பரிய நடனமான சிங்க நடனப் போட்டியில் களமிறங்கினார்.
அப்போட்டி வெஸ்ட் கோஸ்ட் சமூக நிலையத்தில் நடைபெற்றது.
அப்போது லிம்மும் அவரது கணவரும் அங்கு சென்று தங்கள் மகனுக்குத் தொல்லை விளைவித்து போட்டிக்கு இடையூறு விளைவித்தனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது லிம்மின் மகனுக்கு 25 வயது.
அத்தம்பதியர் தமது மகனின் சிங்க நடன ஆடை மீது காப்பியை ஊற்றினர்.
அந்த ஆடை சிங்க நடனக் குழுவுக்குச் சொந்தமானது.
தொடர்புடைய செய்திகள்
ஆடையிலிருந்து காப்பிக் கறையை அகற்ற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, லிம் அந்த ஆடையை உதைத்துச் சேதப்படுத்தினார்.
லிம் மற்றும் அவரது செயலின் காரணமாகப் போட்டி கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குத் தடைப்பட்டது.
அவர்கள் இருவரும் சமூக நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
போட்டிக்கு இடையூறு விளைவித்ததாக லிம்மின் கணவரான 60 வயது சியாங் எங் ஹோக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மார்ச் 19ல் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று தமக்கு நன்கு அறிமுகமான 60 வயது ஆடவரை பொங்கோலில் உள்ள காப்பிக்கடையில் லிம் தொடர்ந்து பலமுறை தள்ளிவிட்டார்.

