நிரந்தரமாக மூடப்படும் ‌‌‌ஹார்பர்ஃபிரன்ட் சென்டர்

நிரந்தரமாக மூடப்படும் ‌‌‌ஹார்பர்ஃபிரன்ட் சென்டர்

2 mins read
0b258329-ed2a-4fee-a5a7-6ec03fd21a2d
1992ஆம் ஆண்டிலிருந்து ஹார்பர்ஃபிரன்ட் சென்டரில் அனைத்துலகப் படகு முனையம் செயல்பட்டு வருகிறது. - படம்: சாவ்பாவ்

ஹார்பர்ஃபிரன்ட் சென்டர் கடைத்தொகுதி வரும் ஜூலை 27ஆம் தேதியுடன் தனது செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்திக்கொள்வதாக ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளது.

அங்குள்ள சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையம் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து, 5 ஹார்பர்ஃபிரன்ட் அவென்யூவில் செயல்படத் தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்பர்ஃபிரன்ட் சென்டர் வளாகத்திற்குள் தற்போதிருக்கும் முனையத்திலிருந்து கிட்டத்தட்ட 70 மீட்டர் தொலைவில் புதிய முனையம் அமைந்துள்ளது.

முதலில், பாத்தாம் ஃபாஸ்ட் ஃபெர்ரி நிறுவனம், ஜூலை 7ஆம் தேதி, புதிய முனையத்தில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும். பின்னர், பிற படகுச் சேவை, சொகுசுக் கப்பல் நிறுவனங்கள் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து அங்கு சேவைகளை வழங்கவிருக்கின்றன.

அனைத்துச் சேவைகளும் புதிய முனையத்துக்கு மாறுவதால் படகுப் போக்குவரத்துப் பாதைகள், அவை சென்றுசேரும் இடங்கள், அவற்றின் பயண நேரங்கள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது என்று சிங்கப்பூர்க் கப்பல் முனையம் ஜூன் 15ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.

அந்த அனைத்துலக முனையம் ஹார்பர்ஃபிரன்ட் சென்டரில் 1992ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது.

பாத்தாம் சென்டர், ஹார்பர் பே, செக்குபாங், தஞ்சோங் பாலாய் கரிமுன், கோல்ஸ் கோஸ்ட், நிருப் தீவு ஆகிய இந்தோனீசியத் தலங்களுக்கான படகுச் சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்று அது தெரிவித்தது.

அனைத்துலக சொகுசுக் கப்பல் செயல்பாடுகளும் வழக்கம்போல தொடரும்.

படகுகளும் சொகுசுக் கப்பல்களும் அணையும் இடங்களிலும் மாற்றங்கள் இருக்காது.

ஹார்பர்ஃபிரன்ட் சென்டர் கடைத்தொகுதி மூடப்படுவது குறித்து அதன் உரிமையாளரான மேப்பல்ட்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்முறையாக அறிவித்தது.

அந்தக் கடைத்தொகுதியை 33 மாடிகள் கொண்ட பலபயன் கட்டடமாக மாற்ற மேப்பல்ட்ரீ நிறுவனம் திட்டமிடுவதாகக் குறிப்பிட்டது.

அலுவலகங்களும் சில்லறை வணிகக் கடைகளும் உள்ள அந்தக் கட்டடம் 2031ஆம் ஆண்டின் முற்பாதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்