மணமுறிவுக்கான நடைமுறை முடிவடையாத நிலையில், கணவரிடமிருந்து மாதாந்தோறும் S$600 (US$460) ஜீவனாம்சம் கோரிய மாது ஒருவரின் மனுவை குடும்ப நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது.
தாம் வேலையில் இல்லை என்றும் பல்கலைக்கழகத்தில் பயிலும் தம் இரு பிள்ளைகளுக்கு வழங்க கணவரின் நிதியாதரவை தாம் சார்ந்திருப்பதாக அவர் கூறினார்.
வழக்கமான செயல்முறையைப் போன்று இருதரப்பினரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
மாவட்ட நீதிபதி பேட்ரிக் டே வெய் ஷெங் புதன்கிழமை (செப்டம்பர் 11) அளித்த தீர்ப்பில், அந்த மாதின் கோரிக்கையை நிராகரித்தார்.
தமக்குச் சொந்தமான $300,000 மதிப்புடைய பங்குகளை அந்த மாது விற்றதையும் அதிலிருந்து $120,000ஐ தம் பிள்ளைகளுக்கு அந்த மாது மாற்றிவிட்டதையும் நீதிபதி சுட்டினார்.
மாதச் செலவாக $5,040ஐ அந்த மாது சுட்டினார். உணவு, மளிகைப் பொருள்களுக்காக $2,200, ஆடை மற்றும் தனிப்பட்ட பராமரிப்புக்காக $450, பயணங்கள் மற்றும் கேளிக்கைக்காக $1,270, தம் பெற்றோருக்கான படித்தொகையாக $400 உள்ளிட்டவை அந்த மாதச் செலவில் அடங்கும்.
இந்தச் செலவினங்களுக்கு ஆதாரமாக அந்த மாது வழங்கிய ரசீதுகள், அவரின் ஆடம்பர வாழ்க்கைமுறையை வெளிக்காட்டுவதாக நீதிபதி டே கூறினார்.

