தியாகம், நேர்மை, நன்றியுணர்வு போன்ற நற்பண்புகளின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டும் ஓர் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக ஹஜ்ஜுப் பெருநாள் திகழ்கிறது.
“முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நான், என் மீது வைக்கப்பட்டிருக்கும் பெரும் நம்பிக்கை, பொறுப்புகளுக்கு நன்றி கூறுகிறேன்,” என்றார் உள்துறை மூத்த துணை அமைச்சருமான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம்.
“உங்களை நன்கு அறிந்துகொள்ளவும் உங்கள் விருப்பங்களைப் புரிந்துகொள்ளவும் நமது சமூகத்தை வலுப்படுத்த நாம் ஒன்றாக முன்னேறும்போது உங்கள் குரலாக இருக்கவும் நான் விரும்புகிறேன்.
“இது சிங்கப்பூருக்கான, நமது சமூகத்திற்கான, எனது மற்றும் எனது குழுவின் அர்ப்பணிப்பாக இருக்கும்,” என்றும் அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
இந்த ஆண்டு, ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் சிங்கப்பூர் முழுவதும் சுமுகமாக நடந்துள்ளன. ‘சலாம்எஸ்ஜி குர்பான்’ மூலம் சிங்கப்பூர் மலாய்/முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்கள் போன்ற பல்வேறு தரப்புகளின் முயற்சிகளுக்கு மக்கள் அனைவரிடமிருந்தும் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது குறித்து பெருமைப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் ஃபைஷால், இங்கு சிங்கப்பூரில் ஸக்காத் பயனாளிகளும், வசதி குறைந்த குடும்பங்களும் மறக்கப்படவில்லை என்பதையும் சுட்டினார்.
“காஸாவில் மனிதாபிமான நெருக்கடியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்கள் உட்பட, உலகெங்கிலும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குர்பான் இறைச்சியை நன்கொடையாக வழங்குவதன் மூலம் உங்களில் பலர் மிகுந்த தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளீர்கள்,” என்று கூறிய அமைச்சர், “நமது ஹஜ் யாத்ரிகர்கள், புனித மெக்காவில் உள்ள நமது அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை அறிந்து நன்றியுடனும் மன நிறைவுடனும் இருக்கிறேன்,” என்று பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூர் முஸ்லிம்களுக்குத் தமது மனமார்ந்த ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார் அவர்.