ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), மார்ச் 11ஆம் தேதி கினெக்ஸ் மால் இஸ்தானா அரங்கத்தில் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.
அந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, சங்கத்தின் 15 ஆண்டுகால நற்பணிகளைப் பாராட்டிப் பேசினார். ஒன்றுபட்ட சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சங்கத்தின் தலைவரான முனைவர் மு. அ. காதர் ஆற்றிய வரவேற்புரையில், கல்வி சார்ந்த சமூகநலப் பணிகளை ஆற்றிவரும் தங்கள் சங்கம் கடந்த 15 ஆண்டுகளில் 150 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்திருக்கிறது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அத்துடன், நல்லிணக்கத்தை மேம்படுத்தி ஒன்றுபட்ட சமூகமாகத் திகழ்வதற்கு இதுபோன்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து சங்கம் நடத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.
சங்கம் ஆற்றிவரும் கல்விப்பணியின் ஓர் அங்கமாக, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பென்கூலன் பள்ளிவாசல் இமாம் மௌலவி கலீல் அஹமது ஹசனீ, புனித ரமலான் மாத சிறப்புகளைப் பற்றியும் நற்பண்புகளைப் பற்றியும் சிற்றுரையாற்றினார்.
பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள், செயலவை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், சங்க உறுப்பினர்கள் என ஏறக்குறைய 200 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சங்கத்தின் செயலவை உறுப்பினர் நூர் முஹம்மது ஹபீபுல்லாஹ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

