நல்லிணக்கத் தூதர் ஹேமரூபன்

நல்லிணக்கத் தூதர் ஹேமரூபன்

2 mins read
cb7b555d-4a56-4a41-99b0-d06d840d527d
சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் தூதராகத் திகழ்கிறார் ஹேமரூபன். - படம்: ஹார்மனி சர்க்கல்

இன, சமய நல்லிணக்க மாதமான ஜூலை ஒரு முடிவுக்கு வரும் நிலையில், இதன் தொடர்பில் சிங்கப்பூர் கடந்துவந்துள்ள வெற்றிப்பாதையை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறார் ‘ஹார்மனி சர்க்கல்’ எனும் நல்லிணக்க வட்டத்தைச் சேர்ந்த 30 வயது ஹேமரூபன்.

சீ ஹுவா தொடக்கப்பள்ளியில் சமூகவியல் பாடம் கற்பிக்கும் இந்த ஆசிரியர், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் தூதராகத் திகழ்கிறார்.

சோங் பாங் வட்டாரத்தில் செயலாற்றும் இவர், இந்தச் சேவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்.

நீ சூன் குழுத்தொகுதியில் நல்லிணக்க ‘உருட்டுப்பந்து’ விளையாட்டு உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார் இவர்.

அத்தகைய நிகழச்சிகளின் மூலம் பல்லின மக்களிடையே வலுவான பிணைப்பை உருவாக்குவதில் தாம் மகிழ்ச்சி கொள்வதாகக் குறிப்பிட்டார்.

“அதுமட்டுமல்ல, நாங்கள் கலந்துரையாடல்கள், விளையாட்டுகள் போன்ற கேளிக்கை நடவடிக்கைகளின் மூலம் இளையர்களை ஈர்த்து இந்த இயக்கத்தில் ஈடுபடச் செய்கிறோம்,” என்று திரு ஹேமரூபன் கூறினார்.

ஹவ் பா வில்லாவில் இளம் தலைவர்களுக்கான பயிலரங்கு போன்ற திட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பல்வேறு கலாசார, சமய வழக்கங்களை இளையர்கள் புரிந்துகொள்வதை இவர் இயன்றவரை உறுதி செய்துள்ளார்.

“ஒரு நாட்டு மக்களாக நாம் அனைவரும் இணைந்திட முடியும் என்பதில் இளையர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்திற்கு இந்தச் சிந்தனை மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.

ஹேய்மின் சுனிம் எழுதிய ‘த திங்ஸ் யு கென் சீ ஒன்லி வென் யு ஸ்லோ டவுன்’ (The Things You Can See Only When You Slow Down) என்ற நூலைத் தாம் விரும்பிப் படிப்பதாகக் கூறிய திரு ஹேமரூபன், மெத்தனப்போக்கை விட்டுவிட்டு நம்மைச் சுற்றியுள்ளதை மதிக்க இந்நூல் மூலம் தாம் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.

“தொண்டூழியத்தில் ஈடுபட்ட பலர், மதிப்புமிக்க சமூகத் தலைவர்களாக உயர்ந்துள்ளனர். இவர்கள் என் வாழ்க்கைக்கும் தொண்டூழியப் பயணத்திற்கும் தூண்களாக விளங்குகின்றனர்,” என்று கூறினார் ஹேமரூபன்.

குறிப்புச் சொற்கள்