நல்லிணக்கம் பேணும் நன்முயற்சியில் இளையர்கள்

2 mins read
2d7e986a-8d99-49e9-8e02-1e77c5af43eb
கல்வி மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரியும் கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவும் மாநாட்டில் கலந்துகொண்டனர். - படம்: ஒன்பீப்பள்.எஸ்ஜி

இனம், பண்பாடு, அடையாளம் சார்ந்த சிக்கலான கலந்துரையாடல்களுக்குப் பாதுகாப்பான இடம் அளித்துவந்த ‘ஹார்மனிவொர்க்ஸ்’ மாநாடு இளையர் வழிநடத்தும் இயக்கமாக மாறியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ள மாநாட்டில் தற்போது இளையர்கள், தேவைப்படும் உரையாடல்களுக்கு ஏற்பாடு செய்து, அவற்றை வடிவமைத்து வருவதாகக் கல்வி மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஜூலை 12ஆம் தேதியன்று நடைபெற்ற மாநாட்டின்போது தொடக்கவுரை ஆற்றிய டாக்டர் ஜனில், நேர்மை, பரிவு, மரியாதை ஆகிய பண்புகள் நிறைந்த சூழலைத் தருவதற்கு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதைக் குறிப்பிட்டார்.

“ஆண்டுகள் உருண்டோட, பன்முகத்தன்மைமிக்க பின்புலங்களைச் சேர்ந்த இளையர்களை ஈர்க்கும் துடிப்புமிக்க தளமாக இம்மாநாடு உருமாறியுள்ளது. இஸ்லாமிய மதரசா சமயப் பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகள், கலாசார, சமயக்குழுக்கள் ஆகியன முன்வந்து, முன்யோசனைகளை வழங்குகின்றன,” என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார். 

சிக்கலான விவகாரங்களைப் பற்றிய ஆக்கபூர்வமான கலந்துரையாடல் உருமாற்றும் தன்மை வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். 

“எங்கள் பங்காளிகளின் உறுதியான ஆதரவின்றி இந்தப் பயணம் சாத்தியமாகி இருக்க முடியாது. 

“சுயஉதவிக் குழுக்கள், மக்கள் கழகம், சமூக மேம்பாட்டு மன்றங்கள், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஆகியவற்றுடன் நமது சமூக, சமய, வணிகப் பங்காளிகள் எங்களுடன் கைகோத்து, எங்களது கருத்துகளுக்குத் தளம் வழங்கி அதிகமானோரைச் சென்றுசேர கைகொடுத்துள்ளனர்,” என்று அமைச்சர் ஜனில் சொன்னார்.

சிங்கப்பூரில் கொள்கை ஆய்வுக் கழகமும் ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்பும் இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் குறித்தும் பேசிய அமைச்சர் ஜனில், சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள் சிலவற்றையும் சுட்டினார்.

“நல்லிணக்கம் பற்றிய மேம்பட்ட சமூகக் கண்ணோட்டங்கள், உயர்ந்துவரும் சமூக நம்பிக்கை, வெவ்வேறு பண்பாடுகள் பற்றி வளர்ந்துவரும் ஆர்வம் ஆகியவை நாம் தொடர்ந்து கட்டிக்காக்கும் விழுமியங்களை வெளிப்படுத்துகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், பிற இனத்தவர் ஒருவரையேனும் உற்ற நண்பராகக் கொண்டுள்ளோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் அவர் சுட்டினார்.

அவ்விகிதம் 2013ல் 45.6 விழுக்காடாகவும், 2018ல் 55.5 விழுக்காடாகவும், 2024ல் 53.2 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன.

சமூகக் கட்டமைப்புகள் சிறிதாகும்போது, பிற இனத்தவருடன் நல்லுறவை ஏற்படுத்தி, கட்டிக்காக்கும் வாய்ப்புகளும் குறைகின்றன என்று டாக்டர் ஜனில் கூறினார். 

வெவ்வேறு இன, சமயக் குழுக்களுக்கிடையே பாகுபாடு குறித்த கண்ணோட்டம் தொடர்ந்து வேறுபடுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது.

இன, சமய அடையாளங்களுடன் வயது, கல்வி, சமூக - பொருளியல் பின்புலம் ஆகியவையும் இந்த வேறுபாடுகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜனில் சொன்னார்.

மாநாட்டின் 20ஆம் ஆண்டுநிறைவைக் குறிக்கும் வகையில், ‘20 செயல்கள், ஒரே மக்கள்’ என்ற ஒரு மாத இயக்கம் தொடங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

ஒருங்கிணைப்பு, புரிந்துணர்வு, மரியாதை ஆகியவற்றை வளர்க்க சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுப்பதாக இந்தத் திட்டம் உள்ளது என்று அமைச்சர் ஜனில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்