எலிகளின் தொல்லையைத் தாள முடியாமல் தேசியச் சுற்றுப்புற வாரியம், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு எலித்தொல்லை காரணமாக 1,000க்கும் மேற்பட்ட சம்பவங்களில் உரிமையாளர், மேலாளர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், இந்த நடவடிக்கை போதாது என்பதால் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் கூறியது.
2024ஆம் ஆண்டின் சம்பவங்கள் கடைத் தொகுதிகள், வர்த்தக இடங்கள், உணவுக் கடைகள் சம்பந்தப்பட்டவை என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) வெளியிட்ட அறிக்கையில் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. 2023ஆம் ஆண்டின் 670 எலிச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 2024ல் அவை ஏறக்குறைய இரண்டு மடங்காகியதாகவும் அது கூறியது.
2024ஆம் ஆண்டின் பாதிச் சம்பவங்கள் குப்பைகளை முறையாக அகற்றப்படாததால் ஏற்பட்டன.
ஏப்ரல் 1 முதல் மூன்று பிரிவுகளில் எலிகள் பெருகுவதற்கு காரணமான குறைபாடுகளுக்கு இடங்களின் மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக அமைப்பு அமலாக்கத்தை கடுமையாக்கும்.
எலிகள் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சாதகமான சூழ்நிலையை வைத்திருப்பது, எலிகள் வருவதற்கு காரணமான குப்பைகளை அகற்றாமல் வைத்திருப்பது, எலி வளைகள் இருப்பது ஆகியவற்றுக்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் தெரிவித்தது.