சிங்கப்பூரில் வசிக்கும் 61 விழுக்காட்டினர் அதாவது 5ல் 3 பேர் மட்டுமே இங்குள்ள சாலைகள் பாதுகாப்பானவை என்று கருதுவதாகப் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மேலும், சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான ஆபத்துகளுக்கு ஓட்டுநர்களின் பொறுமையின்மையும் அவசரப் போக்கும் தான் முக்கியக் காரணம் என ஆய்வில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசிப் பேர் கூறியுள்ளனர்.
1,000 சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை, சனிக்கிழமை (மே 30) நடைபெற்ற சமூக சாலைப் பாதுகாப்பு தின நிகழ்வில் உள்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் வெளியிட்டார்.
சிங்கப்பூர் சாலைகளில் கடந்த 2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில் 149 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சமாகும். அதேபோல காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2024ல் 9,342-லிருந்து கடந்த ஆண்டு 9,955 ஆக உயர்ந்துள்ளது.
அதிவேக வாகன ஓட்டத்திற்கான விதிமீறல் வழக்குகள் 2023ல் இருந்ததை விட, 2025ல் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 253,550 ஆகப் பதிவாகியுள்ளன.
இதனைக் கட்டுப்படுத்தத் தீவு முழுவதும் புதிய போக்குவரத்து விதிமீறல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
“சாலைப் பாதுகாப்பு நம்மிடம் இருந்தே தொடங்குகிறது” என்று குறிப்பிட்ட திருவாட்டி சிம் ஆன், வேகத்தை விடப் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“ஓட்டுநர் மேம்பாட்டுப் புள்ளி முறையில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான மதுவின் அளவு வரம்பைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் சட்ட அமலாக்கத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்’’ என்றார் மூத்த துணை அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் மட்டுமே பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் கலாசாரத்தை மாற்றிவிட முடியாது என்றும் அனைவரும் அதற்கான பங்கினை ஆற்ற வேண்டியதும் அவசியமாகும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

