முதியோருக்கான வங்கிச் சேவைகளை மேம்படுத்தும் புதிய ஏடிஎம் அணுகல்

முதியோருக்கான வங்கிச் சேவைகளை மேம்படுத்தும் புதிய ஏடிஎம் அணுகல்

2 mins read
ae05e750-f482-493d-adb3-faa769508d34
சிங்கப்பூரில் ஐந்து குடிமக்களில் ஒருவர் தற்போது 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருக்கும் ‘மூத்தோர் மிக்க சமூக’ நிலையை எட்டியுள்ளனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஏடிஎம் இயந்திரத்தை எளிதில் அணுகும் முறை முதல் அறிவாற்றல் குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டும் வாடிக்கையாளர்களுக்கான வலுவான பாதுகாப்புகள் வரை, முதியவர்கள் வயதாகும்போது நிதி ரீதியாகப் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க உதவுவதற்காக வங்கிகள் தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.

டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய வங்கிகள், நெட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 2026ஆம் ஆண்டுக்குள் சாலையோர உணவு நிலையங்கள், பிரதான பேரங்காடிகள் போன்ற முக்கியப் பொது இடங்களிலிருந்து 500 மீட்டருக்குள் ஓர் ஏடிஎம், வங்கிக் கிளை அல்லது பணம் எடுக்கும் இயந்திரத்தை அமைக்கும்.

அதேபோல, 2027ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கிலிருந்தும் 500 மீட்டருக்குள் ஓர் ஏடிஎம் கிளை அல்லது பணம் எடுக்கும் இயந்திரத்தையும் அவை வழங்கும்.

‘கேஷ்பாயிண்ட்’ என்பது, வாடிக்கையாளர்கள் நெட்ஸ் வழியாகப் பொருள்களை வாங்கும்போது, ​​தங்கள் சிங்கப்பூர் வங்கி ஏடிஎம் அல்லது பற்றட்டையைப் பயன்படுத்திப் பணம் எடுக்க அனுமதிக்கும் ஒரு பங்கேற்பு வணிக நிறுவனமாகும்.

தற்போது, ​​செவன் இலவென், கோல்டு ஸ்டோரெஜ், ஜயண்ட், கார்டியன், ஜேசன்ஸ், மார்க்கெட் பிளேஸ், சிங்போஸ்ட், ஷெங் சியோங் ஆகிய இடங்களில் கேஷ்பாயிண்ட்களை வழங்கும் ஒரே வங்கி டிபிஎஸ் மட்டுமே.

பணத்திற்கான வசதியான அணுகலை அதிகரிக்கும் இந்த நடவடிக்கை, “வங்கிப் பழக்கவழக்கங்கள் மாறும்போது, ​​மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது பின்தங்கியதாகவோ உணரும் அபாயத்தைக் குறைப்பதற்காகவே எடுக்கப்படுகிறது,” என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (ஏபிஎஸ்) கூறியது.

மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்த போதிலும், மூத்த குடிமக்கள் உட்பட சில சிங்கப்பூரர்களுக்கு ரொக்கப் பணம் இன்னும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது என்று ஏபிஎஸ் குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் ஐந்து குடிமக்களில் ஒருவர் தற்போது 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருக்கும் ‘மூத்தோர் மிக்க சமூக’ நிலையை எட்டியுள்ள நிலையில், மூத்த குடிமக்களின் வங்கித் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் நோக்கில் உள்ளூர் வங்கிகள் 20 முன்னெடுப்புகளை வெளியிட்டுள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இவை, வியாழக்கிழமை (ஜூன் 25), சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘நீண்ட ஆயுள் சமூகத்திற்கான வங்கிச் சேவை’ என்ற வழிகாட்டிப் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

“நமது மக்கள் தொகை மூப்படையும்போது, ​​மூத்த குடிமக்களின் நிதித் தேவைகள் இன்னும் முக்கியத்துவம் பெறும். ஆனால் மூத்த குடிமக்கள் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. சிலர் மின்னிலக்கப் பயன்பாட்டில் நம்பிக்கையுடன் உள்ளனர். சிலருக்குக் கூடுதல் உதவி தேவைப்படுகிறது. வங்கிகள் இந்தப் பன்முகத்தன்மைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்,” என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங், ஜூன் 25ஆம் தேதியன்று மரினா பே சேண்ட்ஸில் நடைபெற்ற ஏபிஎஸ்-இன் வருடாந்தர இரவு விருந்தில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வங்கிச் சேவைமூத்த குடிமக்கள்வங்கிபணம்