மக்களின் வலுவான, புதுப்பிக்கப்பட்ட ஆதரவைப் பெற்ற மக்கள் செயல் கட்சி தலைமையில் உள்ள அரசாங்கம் உருவானதும் கூடுதல் ஆதரவுடன் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில் இருப்பதும் சிங்கப்பூரர்கள் தற்போதைக்குத் தேர்ந்தெடுத்துள்ள சமநிலை என்று மக்கள் செயல் கட்சியின் தலைவர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
ஆனால் இது தொடர்ந்து மாறக்கூடிய, பரிணமிக்கக் கூடிய சூழ்நிலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பொதுத் தேர்தலின்போதும் இந்தச் சமநிலை மாறக்கூடும். தேர்தல்வரை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் எப்படி செயலாற்றின போன்ற காரணத்தைப் பொறுத்து அந்த மாற்றம் ஏற்படுவதாகத் திரு லீ கூறினார்.
மக்கள் செயல் கட்சியின் தலைவர் பொறுப்பை இவ்வாண்டு மே மாதம் ஏற்றதை அடுத்து ஊடகங்களுக்கு அளித்த முதல் நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“(இது) நிரந்தரச் சமநிலை அன்று. அரசின் ஆட்சி அதைக் கண்காணிப்பது என ஆராய்ந்து என்ன மாதிரியான சமநிலை வேண்டும் என சிங்கப்பூரர்கள் முடிவு செய்கின்றனர் என்பது அவர்களைப் பொறுத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மக்கள் செயல் கட்சியின் அரசாங்கம் சிறப்பாகச் செயல்பட்டதா, எதிர்க்கட்சி அரசாங்கத்தைத் தரமான முறையில் சரிபார்த்து நல்ல யோசனைகளை முன்மொழிந்ததா என்பதைத் தவிர, மற்ற அரசியல் கட்சிகளும் முன்னேற்றம் அடைந்துள்ளனவா என்பதையும் வாக்காளர்கள் கவனிப்பார்கள் என்று திரு. லீ கூறினார்.
தேர்தலில் நிறுத்தப்படும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் உள்நாட்டு, அனைத்துலகப் புவிசார் அரசியல் சூழ்நிலையும் இந்தச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 65.57 விழுக்காட்டு மக்கள் வாக்குகளைப் பெற்று வாகை சூடியது. அதே நேரத்தில் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில் 12 இடங்களுடன் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
நல்ல, விசுவாசமான எதிர்க்கட்சி இருப்பதை சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் மக்கள் செயல் கட்சி இதனை ஏற்றுக்கொண்டதையும் தேர்தல் முடிவு காட்டுவதாகக் கல்வி அமைச்சராகவும் இருக்கும் திரு. லீ கூறினார்.
அதே வேளையில், சிங்கப்பூர் செழிப்பதற்கும் நாட்டின் சமூக, பொருளியல் நிலைமையுைம், உலகத்துடனா புவிசார் அரசியல் உறவுகளையும் நிலைநிறுத்த நிலையான அரசாங்கம் தேவை என்பதை சிங்கப்பூரர்கள் உணர்வுபூர்வமாக அறிவார்கள் என்றும் திரு லீ கூறினார்.
தேர்தலுக்குப் பிறகு, செப்டம்பர் 22 அன்று அதிபரின் உரையை ஒட்டிய விவாதத்துடன் தொடங்கும் நாடாளுமன்றத்தின் புதிய தவணையின்போது உறுதியான, ஆக்கபூர்வமான விவாதங்களை மக்கள் செயல் கட்சி ஆவலுடன் எதிர்பார்ப்பதாக திரு லீ தெரிவித்தார்.
விவகாரங்களைப் பொறுத்தவரையில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் சிங்கப்பூரைத் தொடர்ந்து நிலைக்கவைப்பதற்குச் சில நேரம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதைச் சிங்கப்பூரர்கள் புரிவதாகவும் திரு லீ கூறினார்.

