சிங்கப்பூரிலேயே பராமரிக்கப்பட்டுப் பிறந்துள்ள நான்கு பருந்துக் குஞ்சுகள் முதன் முதலாகப் சிறகடித்துப் பறக்கும் காட்சிகளைத் தேசிய பூங்காக் கழகம் காணொளியாக வெளியிட்டுள்ளது.
மனத்துக்குக் களிப்பூட்டும் இயற்கையின் சிறப்பைக் காட்டும் அக்காணொளி, யூடியூப்பில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) வெளியிடப்பட்டது.
சூலியா ஸ்திரீட்டில் உள்ள ஓசிபிசி வங்கியின் தலைமையகக் கட்டடத்தின் 34வது மாடியில் 24 மணிநேரமும் இயங்கும் கேமராக் கருவிகளைக் கழகம் பொருத்தியுள்ளது. அங்கு அப்பருந்துகளுக்குக் கூடு அமைத்து, குஞ்சு பொரிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதிமுதல் கூடுகளில் நடக்கும் செயல்பாடுகளை காணொளி வழியாக மக்கள் நேரடியாக யூடியூப்பில் காணலாம்.
இரண்டாம் முறையாக அதே இடத்தில் இந்த வகை ஜோடிப் பருந்துகள் அடைகாத்து குஞ்சு பொரிக்கக் கழகம் உதவியுள்ளது. சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த அரிய வகை வேட்டைப் (peregrine) பருந்து ஜோடி, கடைசியாக கடந்த 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் இரண்டு குஞ்சுகளை சிங்கப்பூரில் பொரித்து வரலாறு படைத்தது. அவை மே மாதம் பறக்கத் தொடங்கின.
சுயமாகப் பறந்து வேட்டையாடும் வரை இந்தக் குஞ்சுகள் பெற்றோருடன் வாழும் என்று தேசியப் பூங்காக் கழக விலங்கியல் நிர்வாகப் பிரிவின் தலைமை ஆய்வாளர் டாக்டர் மால்கம் சோ கூறினார்.

