மெக்பர்சனில் உணவங்காடி நிலையங்களில் குடியிருப்பாளர்கள் கட்டணக் கழிவுடன் கூடிய உணவை வாங்க முடியும். சனிக்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கப்பட்ட $216,000 மதிப்பிலான உணவு ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.
‘மெக்பர்சன் சாப்பிட்டுவிட்டீரா’ எனப்படும் இத்திட்டம் மூலம் 2,400 குடும்பங்கள்வரை பயன்பெறும். இதன்மூலம் உள்ளூர் உணவங்காடிக் கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கும்.
கேலாங் ஈஸ்ட் சந்தை, உணவு நிலையத்தில் சனிக்கிழமை காலை மெக்பர்சன் எம்.பி. டின் பெய் லிங் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்திற்குத் தகுதிபெற, நீல அல்லது ஆரஞ்சு நிற சாஸ் அட்டையை வைத்திருக்கும் சிங்கப்பூர் குடிமக்களாக குடியிருப்பாளர்கள் இருக்க வேண்டும். அல்லது, அவர்களின் தனிநபர் மாதக் குடும்ப வருமானம் $2,300ஆக அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். உணவுப் பற்றுச்சீட்டுகளைப் பெற மெக்பர்சன் சமூக மன்றத்தில் அவர்கள் பதிந்துகொள்ளலாம்.
தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் $3 பெறுமானமுள்ள 15 பற்றுச்சீட்டுகள் கிடைக்கும். உணவு விலையைத் தள்ளுபடி செய்ய பயன்படுத்தப்படும் இப்பற்றுச்சீட்டுகள், 2026 மார்ச் வரை செல்லுபடியாகும்.
கேலாங் ஈஸ்ட் சந்தை, உணவு நிலையத்தில் இயங்கும் ஏறக்குறைய 137 உணவங்காடிகளும் 79/79A, 80, 89 சர்கிட் சாலையில் உள்ள உணவங்காடி நிலையங்களும் இத்திட்டத்தில் பங்குபெறுகின்றன. பங்குபெறும் உணவங்காடிகளுக்கு முன்னால் ‘மெக்பர்சன் சாப்பிட்டுவிட்டீரா’ (ஹொக்கியன் மொழியில் Jiak Ba Buay) வில்லை ஒட்டப்பட்டிருக்கும்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது குறித்து குடியிருப்பாளர்களின் கவலையைப் போக்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருவாட்டி டின் விளக்கினார்.
இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னரே, கடந்த ஓரிரு வாரங்களில் 1,140 பேர் இதற்குப் பதிவுசெய்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

