தூய்மைப் பணிகளுக்காக தேக்கா நிலையம் உட்பட 88 உணவு நிலையங்கள் மூடப்படும்

தூய்மைப் பணிகளுக்காக தேக்கா நிலையம் உட்பட 88 உணவு நிலையங்கள் மூடப்படும்

1 mins read
c53f69d6-7fd9-45ec-bf12-e0b6590d3474
2025 ஜனவரி 22ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில், தேக்கா நிலையத்தில் காணப்பட்ட வாடிக்கையாளர்கள். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சுத்தம் செய்வதற்காக செப்டம்பரில் சில நாள்கள் மூடப்படும் உணவங்காடி நிலையங்களில் தேக்கா நிலையமும் ஆடம் ரோடு உணவு நிலையமும் அடங்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்தது.

தேக்கா நிலையம் செப்டம்பர் 21, 22ஆம் தேதிகளில் மூடப்படும். அங்கு இயங்கும் ஜான் வெஸ்ட் மீ கோரிங், அலாவுதின் பிரியாணி, ஹாஜி ஜோஹான் ரோஜாக், டெல்லி லாகோரி உள்ளிட்ட பல உணவுக் கடைகள் அன்றைய நாள்களில் செயல்பட மாட்டா.

அதேபோல், பரக்கத் ஆட்டுக்கறி சூப், செலெரா ரசா நாசி லெமாக் கடைகளைக் கொண்ட ஆடம் ரோடு உணவு நிலையம் செப்டம்பர் 7ஆம் தேதியும் நியூட்டன் உணவு நிலையம் செப்டம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரையிலும் தூய்மைப் பணிகளுக்காக மூடப்படும்.

செப்டம்பரில் தீவு முழுவதும் மொத்தம் 88 உணவங்காடி நிலையங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்குச் சொந்தமான உணவங்காடி நிலையங்களைத் தேசிய சுற்றுப்புற வாரியமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக உணவங்காடி நிலையங்களை நகர மன்றங்களும் சுத்தம் செய்கின்றன.

பொதுமக்கள் சுத்தமான, சுகாதாரமான சூழலில் கட்டுப்படியான விலையில் உணவை உண்டு மகிழ்வதை உறுதிசெய்யவே இத்தகைய வழக்கமான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்