பேரளவில் நடந்த கட்டாய காசநோய்ப் பரிசோதனைக்குப்பின் வியாபாரம் மந்தம்

பேரளவில் நடந்த கட்டாய காசநோய்ப் பரிசோதனைக்குப்பின் வியாபாரம் மந்தம்

2 mins read
0ec0ff5c-dcb6-4273-8201-895511985c19
ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் முடிந்தவரை கடைக்காரர்கள் சிலர் வியாபாரத்தைத் தொடர்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கட்டாய காசநோய் பரிசோதனை நடவடிக்கை அண்மையில் ஜாலான் புக்கிட் மேராவில் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ‘ஏபிசி பிரிக்வொர்க்ஸ்’ சந்தை, உணவங்காடி நிலையத்தில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.

காசநோய் தொடர்பில் 10 புதிய சம்பவங்கள் ஜாலான் புக்கிட் மேராவில் பதிவானதை அடுத்து, பரிசோதனை செய்துகொள்வதற்காக 2,000க்கும் மேற்பட்டோர் பதிந்துகொண்டனர்.

அத்துடன் புளோக் 1 மற்றும் 3ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள், பணிபுரியும் ஊழியர்கள், ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் பணிபுரிபவர்கள், புளோக் 3ல் உள்ள மூத்தோர் நடவடிக்கை நிலையத்தின் ஊழியர்கள், அங்கு செல்லும் மூத்தோர் ஆகியோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.

காசநோய் ஏற்படும் அபாயம் இப்பிரிவினருக்கு அதிகம் என்பதால் கட்டாய காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவடைந்த நிலையில் புதிய பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

முன்பு மக்கள் அதிகம் நாடும் உணவங்காடி நிலையத்தில் இருக்கை கிடைப்பதே சவாலாக இருக்கும்.

ஆனால், அந்நிலை மாறி மதிய உணவு, இரவு உணவு வேளைகளில் பல காலியான இடங்கள் காணப்பட்டன.

வியாபாரம் 30% முதல் 40% வரை சரிந்துவிட்டதாக உணவங்காடி நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர் கூறினார்.

உணவங்காடி நிலையத்தில் கடை வைத்திருப்போர், இதற்குமுன் தங்கள் வியாபாரத்தில் சரிவைச் சந்தித்திருந்தாலும் இதுவே தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய பாதிப்பு என்றனர்.

“கொவிட் கிருமித்தொற்றையே கடந்து வந்துவிட்டோம். இந்தக் காசநோயையும் கடந்துவிடுவோம்,” என்று உணவங்காடிக் கடைக்காரர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பத்து காசநோய் சம்பவங்கள் பிப்ரவரி 2022ஆம் ஆண்டுக்கும் ஜூலை 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக காசநோய் பரிசோதனை நடவடிக்கை பெருமளவில் நடத்தப்பட்டது.

அந்த பத்து பேரும் சிகிச்சை பெற்றுக்கொண்டு பிறருக்குத் தொற்றைப் பரப்பும் நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
உணவங்காடி நிலையம்உணவுக் கடைவர்த்தகம்பாதிப்புபரிசோதனை