அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, உணவங்காடிக் கடைக்காரர்கள் நீண்டகால வருகை அட்டை வைத்திருப்போரில் அதிகமானோரைப் பணியில் அமர்த்தலாம்.
மனிதவளச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த அட்டைகளை வைத்திருப்போர், கடை உதவியாளர்களாகப் பணிபுரிய அனுமதி அளிக்கும் கடிதங்கள் அல்லது முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடிதங்களைப் பெற்றிருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இது நமது உணவங்காடிக் கலாசாரத்தின் உள்ளூர் அடையாளத்தைக் கட்டிக்காப்பதுடன், ஆட்களை வேலைக்கு எடுப்பதன் தொடர்பில் உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு அதிகமான தெரிவுகளையும் வழங்கும்,” என்று தேசிய சுற்றுப்புற வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியது.
தற்போது, வாரியமும் அதன் நடத்துநர்களும் நிர்வகிக்கும் 121 உணவங்காடி நிலையங்களிலும் சந்தைகளிலும் சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே கடை உதவியாளர்களாகப் பணிபுரிய முடியும்.
நீண்டகால வருகை அட்டை வைத்திருக்கும் கடைக்காரர்களின் துணைகளும் தற்போது கடை உதவியாளர்களாகப் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும், விதிமுறை மாற்றத்திற்குப் பிறகு, நீண்டகால வருகை அட்டை வைத்திருப்போர் கடை உதவியாளர்களாக வேலை செய்ய கடைக்காரர்களின் துணைகளாக இருக்கவேண்டியதில்லை.
அவர்கள் கடைக்காரர்களின் பெற்றோராக அல்லது குழந்தைகளாக இருக்கலாம். அல்லது அவர்கள் கடைக்காரர்களுக்கு உறவினர்களாக இருக்கவேண்டியதில்லை.
தொடர்புடைய செய்திகள்
நீண்டகால வருகை பிளஸ் அட்டை (long-term visit pass-plus) வைத்திருப்போர் தங்கள் முதல் விண்ணப்பத்தில் மூவாண்டுகள் வரை இங்குத் தங்கியிருக்க அனுமதி உண்டு. அவர்களுக்குச் சுகாதாரப் பராமரிப்பு, வேலைவாய்ப்பு அனுகூலங்கள் வழங்கப்படும்.
வரும் மாதங்களில் மேல் விவரங்கள் வெளியிடப்படும்.
“நாங்கள் மற்ற ஆதரவுத் திட்டங்களையும் ஆராய்கிறோம். அவை தயாரானதும், அது தொடர்பான விவரங்களைப் பகிர்ந்துகொள்வோம்,” என்றார் டாக்டர் கோ.