புகைமூட்டம்: வெளிப்புற வசதிகளை மூடுகிறது ‘ஆக்டிவ்எஸ்ஜி’

புகைமூட்டம்: வெளிப்புற வசதிகளை மூடுகிறது ‘ஆக்டிவ்எஸ்ஜி’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Oct 2026 - 5:31 pm

2 mins read

புகைமூட்ட நிலைமை மோசமடைந்துவரும் நிலையில், வியாழக்கிழமை (அக்டோபர் 15) சிங்கப்பூரின் மத்திய, தெற்கு, மேற்கு வட்டாரங்களில் உள்ள ‘ஆக்டிவ்எஸ்ஜி’யின் வெளிப்புற, குளிரூட்டப்படாத விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

நண்பகல் 12 மணிக்கு மேற்குப் பகுதியில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 212ஐத் தொட்டது. அதைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணி அளவில் அது 210 என்ற ‘மிக ஆரோக்கியமற்ற’ நிலையில் நீடித்தது.

தீவின் பிற பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையிலேயே இருந்தது. அது, மத்தியப் பகுதியில் 194, கிழக்குப் பகுதியில் 170, தெற்குப் பகுதியில் 162, வடக்குப் பகுதியில் 128 ஆகப் பதிவானது.

விளையாட்டுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் சிங்கப்பூரின் இணையத்தளமான ‘ஆக்டிவ்எஸ்ஜி சர்க்கில்’, காலை 11.30 மணி அளவில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.

அதில், ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு காரணமாகத் தனது விளையாட்டு நிலையங்களில் உள்ள அனைத்து வெளிப்புற, குளிரூட்டப்படாத வசதிகளும் மூடப்படுவதாக அது அறிவித்தது.

இருப்பினும், புகைமூட்டச் சூழ்நிலை மாறிக்கொண்டே இருப்பதால், விளையாட்டு வசதிகளுக்குச் செல்வதற்கு முன்பாக go.gov.sg/activesgfacilitiesclosure எனும் இணையத்தளத்தில் ஆக அண்மைய தகவல்களைப் பார்த்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், சாஃப்ரா மன்றங்களும் அவற்றின் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டுள்ளன.

அக்டோபர் 15ஆம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சாஃப்ரா தோ பாயோ, மறுஅறிவிப்பு வரும்வரை தனது அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் நீச்சல் குளத்தை மூடியுள்ளதாகவும் தெரிவித்தது.

முன்னதாக, அக்டோபர் 14ஆம் தேதி சாஃப்ரா ஜூரோங், சாஃப்ரா சுவா சூ காங் ஆகியவை வெளியிட்ட அத்தகைய அறிவிப்புகளைத் தொடர்ந்து, இந்த அண்மைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்