சிங்கப்பூரில் அடுத்த வாரம் புகைமூட்டம் ஏற்படக்கூடும்: கிரேஸ் ஃபூ

சிங்கப்பூரில் அடுத்த வாரம் புகைமூட்டம் ஏற்படக்கூடும்: கிரேஸ் ஃபூ

2 mins read
aa9a2167-57a5-49b9-9d84-3b5779226074
நிலைமையைச் சிங்கப்பூர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் புகைமூட்டப் பணிக்குழு தயாராய் இருப்பதாகவும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இந்தோனீசியாவில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்தால், அடுத்த வாரம் சிங்கப்பூரில் வறண்ட வானிலை காரணமாகப் புகைமூட்ட அபாயம் ஏற்படக்கூடும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) எச்சரித்துள்ளார்.

அண்மை நாள்களில், கலிமந்தானில் இருந்து சரவாக்கிற்குப் புகைமூட்டம் நகர்கிறது. ஆனால் தற்போது வீசும் காற்று மாசுப்பொருள்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவரவில்லை.

நிலைமையைச் சிங்கப்பூர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் புகைமூட்டப் பணிக்குழு தயாராய் இருப்பதாகவும் திருவாட்டி ஃபூ தெரிவித்தார். தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா கேட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதில் தந்தார்.

தேசிய அளவில் முகக்கவசங்கள் போதிய அளவில் இருக்கின்றன; பள்ளிகள், பாலர் பள்ளிகள், குடியிருப்பு வசதிகள், பராமரிப்பு நிலையங்கள் முதலியவற்றில் காற்றைச் சுத்திகரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று திருவாட்டி ஃபூ கூறினார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி, ஆசியான் சிறப்பு வானிலை நிலையம் வட்டாரத்திற்கான புகைமூட்ட எச்சரிக்கையை உயர்த்தியது. இது எல்லை தாண்டிய புகைமூட்ட அபாயம் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

இந்த வட்டாரத்தில் வறண்ட தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இவ்வாண்டு இயல்பைவிட வறட்சியான, வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்களின், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியோரின் நலனைப் பாதுகாப்பதற்கும் அன்றாட வாழ்க்கையும் அத்தியாவசிய சேவைகளும் முடிந்தவரை வழக்கம்போல் தொடர்வதை உறுதி செய்வதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்,” என்று அமைச்சர் ஃபூ கூறினார்.

சிங்கப்பூரைப் புகைமூட்டம் பாதிக்கக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும் முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காற்றின் தரம், சுகாதார ஆலோசனைகள் குறித்து உடனுக்குடன் தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஜோகூர்புகைமூட்டம்வறட்சிவானிலைஇந்தோனீசியாகிரேஸ் ஃபூ