புகைமூட்ட நிலவரம் மோசமடைந்தால், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு தங்களிடம் போதுமான அளவில் என்95 (N95) முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளதாக சிங்கப்பூரின் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைமூட்டப் பிரச்சினை அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராகி வரும் நிலையில், அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய புகைமூட்டப் பணிக் குழு அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சில்லறை விற்பனையாளர்களுடன் அது கலந்துரையாடி வருகிறது.
என்95 முகக்கவசக் கையிருப்பு நிலைவரத்தைக் கண்காணித்து, தேவைக்கேற்ப விநியோகத்தைச் சீர்ப்படுத்துமாறு சில்லறை விற்பனையாளர்களிடம் அந்தப் பணிக்குழு கூறியதாக சேனல் நியூஸ் ஏஷியாவின் (சிஎன்ஏ) இணையச் செய்தி தெரிவிக்கிறது.
முகக்கவசக் கையிருப்பு தொடர்பாக சுகாதார அமைச்சை சிஎன்ஏ தொடர்புகொண்டது.
போதுமான அளவில் முகக்கவசம் கையிருப்பு இருப்பதாகத் தெரிவித்த அமைச்சு, சிங்கப்பூர் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு முகக்கவசக் கையிருப்புத் தேவைகளைத் தவறாமல் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டது.
இவ்வாண்டின் எஞ்சிய காலப் பகுதியில் கடுமையான எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ளும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என சிங்கப்பூர் அனைத்துலக விவகார ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவும் சூழலில், இந்த அபாயம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உச்சத்தை எட்டும் எனவும் அது தனது முன்னுரைப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த ஆண்டு சிங்கப்பூரில் நீண்ட காலத்திற்குப் பதிலாக, குறுகிய காலத்திற்கே புகைமூட்டம் நிலவக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிலவரத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய பருவநிலை 2023ல் நிலவிய ‘எல் நினோ’ சூழலை ஒத்திருக்கும் என வாரியம் எதிர்பார்ப்பதாக அதன் வானிலைச் சேவைப் பிரிவு இயக்குநர் லெஸ்லி சூ கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ‘எல் நினோ’ நிகழ்வு ஜூலை மாதவாக்கில் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.


