சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில், ஜோகூர் நீரிணையில் பெங்கராங் என்ற பகுதியில் சனிக்கிழமை முதல் (ஜனவரி 24) எரிந்துவரும் தீ கண்காணிக்கப்படுவதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் ஃபேஸ்புக் பதிவில் திங்கட்கிழமை (ஜனவரி 26) இரவு பதிவிட்டுள்ளது.
ஜோகூரில் இன்னும் சில பகுதிகளிலும் தீ எரிந்து வருவதாக வாரியம் தெரிவித்துள்ளது.
அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள், ஜாலான் சுங்கை கப்பால் என்ற பகுதியில் உள்ள புதர்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜனவரி 23ஆம் தேதி 10 ஏக்கர் பரப்பளவில் மூண்ட தீ, தற்பொழுது 30 ஏக்கர் நிலப்பரப்புக்குப் பரவிவிட்டதாக அறியப்படுகிறது.
காற்று பலமாக வீசுவதும் கடுமையான வெப்பமும் தீ மூண்டதற்கான காரணங்கள் என்று பெங்கராங் நகர மன்றத் தலைவர் நொரஸ்மி அமிர் ஹம்சா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
பெங்கராங்கில் உள்ள தாமான் பாயு டமாய் பகுதிக்கும் தீ பரவுவதால், அங்கிருந்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 124 குடியிருப்பாளர்கள் இரண்டு தற்காலிக பாதுகாப்பு முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் கூறினார். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூரில் எரியும் தீயும் அங்கிருந்து வரும் புகையும் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியை திங்கட்கிழமை (ஜனவரி 26) மாலையில் பாதித்துள்ளது. சுவாசத்தில் பலர் புகையின் நெடி நன்கு உணரப்படுவதை தெரிவித்துள்ளனர்.
வடக்கு, வடகிழக்கு திசைகளில் இருந்து சிங்கப்பூருக்குள் வீசும் காற்று, புகை மூட்டத்தை இங்கு வரச்செய்யலாம் என்று வாரியம் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நெருப்பின் வாடையும் நெடியும் உணரப்பட்டாலும் காற்றின் தரத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்று வாரியம் தெளிவுபடுத்தியது.
இரவு 11மணியளவில் சிங்கப்பூரின் மத்திய பகுதியில் 56 என்ற அளவிலும் கிழக்கில் 55 என்ற அளவிலும் தரநிலை வாரியத்தின் இணையப்பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டது.
காற்றின் தரநிலை 0 எண்ணிலிருந்து 55 வரை எட்டினால் அது வழக்கநிலையைக் குறிக்கும். அதேநேரம் 151 முதல் 250வரை இருந்தால் காற்றில் அதிக அளவில் மாசு நிறைந்துள்ளது என்று அர்த்தப்படும்.
பொதுமக்கள் காற்றின் தரத்தை நேரடியாக அறிந்துகொள்ள myENV கைப்பேசிச் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

