புகைமூட்ட மருத்துவக் கட்டணக் கழிவுத் திட்டம் அக்டோபர் 12முதல் தொடக்கம்: ஓங் யி காங்

புகைமூட்ட மருத்துவக் கட்டணக் கழிவுத் திட்டம் அக்டோபர் 12முதல் தொடக்கம்: ஓங் யி காங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Oct 2026 - 12:59 pm

2 mins read

புகைமூட்டத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை நாடும் சிங்கப்பூரர்கள், அக்டோபர் 12 முதல், பலதுறை மருந்தகங்களிலும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகத் திட்டத்தின்கீழ் இயங்கும் பொது மருந்தகங்களிலும் சலுகைக் கட்டணத்தில் மருத்துவப் பராமரிப்பைப் பெற முடியும்.

புகைமூட்டம் தொடர்பான பாதிப்புகளுக்குப் பலதுறை மருந்தகங்களையும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களையும் நாடும் 18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையோர், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், சமூகச் சுகாதார உதவித் திட்ட அட்டை, மருத்துவக் கட்டண விலக்கு அட்டை வைத்திருப்போர் ஆகியோர் அதிகபட்சமாக $10 மட்டுமே செலுத்தவேண்டியிருக்கும்.

இவ்வேளையில், முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை மூத்தோர் அதிகபட்சமாக $5 செலுத்துவர். பொது உதவித் திட்டத்தில் இருப்பவர்கள், புகைமூட்ட மருத்துவக் கட்டணக் கழிவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சலுகைகளால் கட்டணம் ஏதும் செலுத்தவேண்டியதில்லை.

எல்லைதாண்டிய புகைமூட்டத்தால் காற்றுத் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் புகைமூட்ட மருத்துவக் கட்டணக் கழிவுத் திட்டம், பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகத் திட்டம் ஆகிய இரண்டையும் செயல்படுத்துவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்தார்.

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, கண் அழற்சி, நாள்பட்ட அடைப்புச் சுவாச நோய், மேல் சுவாசப் பாதைத் தொற்றுகள் உள்ளிட்ட நோய்கள் மற்றும் இந்நோய்களால் ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவக் கட்டணக் கழிவுத் திட்டம் பொருந்தும்.

புக்கிட் கேன்பராவில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சி ஒன்றுக்கு இடையே ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ஓங், சுவாசப் பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கும் பலதுறை மருந்தகங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

“இது புகைமூட்டத்தினால் மட்டுமே ஏற்பட்டதன்று; இந்த ஆண்டின் புகைமூட்டக் காலம் ‘இன்ஃபுளுவென்சா ‘ஏ’ (Influenza A) சளிக்காய்ச்சல் காலத்தோடு ஒரே நேரத்தில் இணைந்து வந்ததால், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தியதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்,” என்றார் திரு ஓங்.

கடுமையான உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவேண்டும். ஆனால், சாதாரண சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருந்தகத்தில் மருத்துவரை நாடலாம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்மருந்தகம்கட்டணம்