தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிதமான அளவில் சிங்கப்பூரின் புகைமூட்ட நிலவரம்

2 mins read
0e6bcb3d-2402-41a5-a6cd-415a6e6bf881
புதன்கிழமை (மார்ச் 26) காலை 10.20 மணியளவில் சைனாடவுன் வட்டாரத்தில் காணப்பட்ட புகைமூட்டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வான்பகுதியில் புதன்கிழமை (மார்ச் 26) காலை புகைமூட்டம் காணப்பட்டது.

புகைமூட்டத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் மாசு தரநிலைக் குறியீடு (PSI - பிஎஸ்ஐ) காலை 9 மணியளவில் மிதமான அளவில் பதிவாகி இருந்தது.

இந்த வட்டாரத்தில் அபாயம் மிகுந்த எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து கடந்த 17ஆம் தேதி ஆசியான் சிறப்பு பருவநிலை நிலையம் (ASMC) எச்சரித்து இருந்தது.

நீடித்த வறண்ட வானிலை மற்றும் கணிசமாக, தொடர்ச்சியாக எரிக்கப்படும் பகுதிகள் காரணமாக அந்த எச்சரிக்கையை அந்நிலையம் விடுத்தது.

வறண்ட வானிலை காரணமாக மேகோங் துணை வட்டாரத்தின் புகைமூட்ட நிலவரம் அண்மையில் மோசமடைந்ததாக அது குறிப்பிட்டு இருந்தது.

மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில் எரியும் பகுதிகளை அந்த நிலையத்தின் இணையப் பக்கம் காட்டியது.

சிங்கப்பூரில் தற்போது வடகிழக்குப் பருவமழை காலம் என்பதால் காற்று பெரும்பாலும் வடமேற்கு அல்லது வடகிழக்குப் பகுதியில் இருந்து வீசும்.

அதனால், சிங்கப்பூரின் வடபகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூரை நோக்கி புகை வருவதற்கான சாத்தியம் உள்ளது.

புதன்கிழமை காலை 9 மணியளவில் பிஎஸ்ஐ குறியீட்டின் அளவு 61க்கும் 75க்கும் இடையில் பதிவானதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தரவுகள் தெரிவித்தன. ஜனவரி 15ஆம் தேதிக்குப் பிறகு முதன்முறை இந்த அளவை குறியீடு எட்டி உள்ளது.

இருப்பினும் ஒரு மணி நேரத்திற்கான பிஎம் 2.5 குறியீடு சாதாரண நிலையிலேயே பதிவானது. எல்லைதாண்டிய புகைமூட்டம் ஏற்படும்போது அதில் உள்ள மாசுபாட்டைக் கணக்கிட பிஎம் 2.5 குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

பிஎஸ்ஐ குறியீடு 51க்கும் 100க்கும் இடையில் இருந்தால் அது மிதமான அளவு. அப்போது மக்கள் தங்களது வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

குறிப்புச் சொற்கள்