வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) குடியிருப்பாளர்களுக்குப் பசுமையான, வசதியான சுற்றுச்சூழலை உருவாக்க உதவும் சிறந்த பசுமைச்சூழல் பகுதிக்காக முதன்முறையாக வழங்கப்படும் விருதினை (HDB Landscape Award) வாம்போ பூங்கா வென்றுள்ளது.
சிறந்த வடிவமைப்பு, பொறியியல், கட்டுமானம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதற்காக வீடமைப்பு வளர்ச்சிக் கழக விருதுகள் (HDB Awards) ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. விருதுகளைப் பெறும் 36 திட்டங்களுள் ஒன்று வாம்போ பூங்கா. 1.3 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா, ஏறத்தாழ 950 குடியிருப்பாளர்களின் கருத்துகளைப் பெற்று, 2023ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
உத்திபூர்வமான நிலப்பரப்பு வடிவமைப்பு, பயன்படுத்தப்படாத நிலத்தைத் துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கான இடமாக மாற்ற முடியும் என்பதைக் காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.
உடல், மனநலனுக்கான பசுமையிடங்களுடன் சமூக ஒன்றிணைவுக்கான இடம் கொண்ட வாம்போ பூங்காவுடன் பல்லுயிரியலை மேம்படுத்தி, பொழுதுபோக்குப் பகுதிகளாகவும் செயல்படும் பசுமையான சூழலுக்கான பிடாடாரி பூங்காக்கள் இரண்டும் இவ்விருதினை வென்றுள்ளன.
மழைப் பூங்கா (Rain Gardens), ‘பயோஸ்வேல்ஸ்’ எனும் மழை நீரோட்டத்தைச் சீர்படுத்தும் கட்டமைப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பொங்கோல் நீர்முகப்பில் உள்ள ‘காமன் கிரீன்’ (common green at Waterfront II @ Northshore) பூங்காவும் இவ்விருதினை வென்றுள்ளது.
இதுகுறித்துப் பேசிய கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் மெங் டுய், “சிங்கப்பூரர்களுக்குத் தரமான, நிலையான வாழ்க்கைச் சூழல்களை உருவாக்குவதற்கு இணைந்து உழைக்கும் பங்காளிகளின் முயற்சிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட பசுமையான சூழல் பல்லுயிர்ப் பெருக்கம், தட்பவெப்பச் சூழலுக்கு உதவுவதுடன் குடியிருப்பாளர்களின் உடல்நலத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் என்பதற்கு விருது வென்ற திட்டங்கள் சான்றாக விளங்குகின்றன,” என்றார்.
இவ்விருதுகளுடன், கொள்ளைநோய்க் காலத்தினால் தாமதமான திட்டங்களை முடிப்பதில் மீள்தன்மையை வெளிப்படுத்தியதற்காக மேலும் மூன்று திட்டங்களுக்குக் கட்டுமான மீள்தன்மைக்கான அங்கீகாரமும் (Construction Resilience Recognition) வழங்கப்படும்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) நடைபெறவுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக விருதுகள் வழங்கும் விழாவில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் இவ்விருதுகளை வழங்குவார்.
தொடர்புடைய செய்திகள்
இவற்றுடன், வடிவமைப்புக்கான விருதுகளை நான்கு திட்டங்களும், புத்தாக்க வடிவமைப்புக்கான விருதினை இரு திட்டங்களும், வடிவமைப்புத் தகுதிசார் சான்றிதழை (Certificate of Merit) ஆறு திட்டங்களும் வென்றுள்ளன.
கட்டுமான விருதுகளைப் பத்துத் திட்டங்களும், அதற்கான சிறப்புத் தகுதிச் சான்றிதழை மூன்று திட்டங்களும், பொறியியல் விருதினை ஒரு திட்டமும், புத்தாக்கப் பொறியியல் விருதினை இரு திட்டங்களும் வென்றுள்ளன. பொறியியல் தகுதிசார் சான்றிதழை (Certificate of Merit) மூன்று திட்டங்கள் வென்றுள்ளன.