நிலப் பற்றாக்குறையால் 40 தளங்களைத் தாண்டும் வீவக கட்டடங்கள்

நிலப் பற்றாக்குறையால் 40 தளங்களைத் தாண்டும் வீவக கட்டடங்கள்

2 mins read
efb9a53b-23e0-48bc-88ed-6f27044b765b
தற்போது சிங்கப்பூரின் ஆக உயரமான வீவக அடுக்குமாடி வீட்டுத் திட்டமாக விளங்கும் பினெக்கல்@டக்ஸ்டன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2009ஆம் ஆண்டு கட்டப்பட்ட பினெக்கல்@டக்ஸ்டன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) திட்டத்தில் 50 தளங்கள் உள்ளன.

அதுவே தற்போது சிங்கப்பூரின் ஆகப் பெரிய வீவக திட்டமாகும்.

அதையும் விஞ்சும் திட்டம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. பேர்ல்ஸ் ஹில் மலைப்பகுதிக்குக்கீழ் கட்டப்பட்டுவரும் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீவக திட்டத்தில் 60 தளங்களுக்கு மேல் இருக்கும்.

ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே அமையும் அத்திட்டத்தில் கிட்டத்தட்ட 1,700 வீடுகள் இருக்கும். தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் இம்மாதம் நான்காம் தேதி அதுகுறித்து அறிவித்தார்.

சிங்கப்பூரில் இதுபோல் மேலும் பல மிக உயரமான அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.

நிலப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் சிங்கப்பூரில் 40க்கும் அதிகமான தளங்களைக் கொண்ட வீவக திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

அரசாங்க வீடுகளுக்கு இருக்கும் தேவையைப் பூர்த்திசெய்வது நோக்கமாகும்.

தற்போது 35 திட்டங்களில் 119 வீவக புளோக்குகளில் குறைந்தது 40 தளங்கள் இருக்கின்றன. 2011ல் ஏழு திட்டங்களில் அத்தகைய 46 புளோக்குகள் இருந்தன.

அதுபோன்ற உயரமான வீவக அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்கள் உள்ள 31 திட்டங்கள் தற்போது கட்டப்பட்டு வருவதாக புரோப்னெக்ஸ் ரியாலிட்டி சொத்து நிறுவனத்தின் ஆய்வு, பதிவுப் பிரிவுத் தலைவர் வோங் சியூ யிங் தெரிவித்தார்.

தற்போதுள்ள பெரும்பாலான உயரமான வீவக வீட்டுக் கட்டடங்கள் மத்திய வட்டாரம், குவீன்ஸ்டவுன், புக்கிட் மேரா ஆகியவற்றில் அமைந்துள்ளன.

உயரமான வீவக திட்டங்களில் உள்ள வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கை, 2015ஆம் ஆண்டு பினெக்கல்@டக்ஸ்டன் வீடுகள் மறுவிற்பனைக்கு வந்தபோது அதிகரித்ததாக ரியெலியன் குரூப் சொத்து நிறுவனத்தின் தலைமை ஆய்வாளரும் உத்தி அதிகாரியுமான கிறிஸ்டின் சுன் தெரிவித்தார்.

அதே போக்கு 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் இதர சில உயரமான திட்டங்களில் உள்ள வீடுகள் மறுவிற்பனைக்கு வந்தபோது காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உயரமான கட்டடங்களில் உள்ள வீடுகளில் வாழ்வதை சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

2003ஆம் ஆண்டில் வீவகவின் வீடமைப்பு ஆய்வு ஒன்றில் பங்கேற்றோரில் 57.9 விழுக்காட்டினர் 12வது அல்லது அதற்கு உயரமான தளத்தில் உள்ள வீட்டில் வசிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.

1973ல் அந்த விகிதம் 13.9 விழுக்காடாக இருந்தது.

அதேபோல், 2013ல் 31.9 விழுக்காட்டினர் 40லிருந்து 50 தளங்கள் உள்ள அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்களில் வாழ விரும்புவதாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்