சிங்கப்பூரில் கொண்டோமினிய (கூட்டுரிமை) வீடுகளின் வாடகை ஜூலை மாதம் அதற்கு முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.9 விழுக்காடு ஏறியது.
அதேபோல, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் வாடகையிலும் 1.4 விழுக்காடு ஏற்றம் பதிவானது.
ஜூலை மாதம் முழுக்க 8,133 கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இது ஜூன் மாதத்தின் 6,020 வீடுகளைக் காட்டிலும் 35.1 விழுக்காடு அதிகம்.
எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co ஆகிய சொத்துச் சந்தைத் தளங்கள் செவ்வாய்க்கிழமை இந்த முன்னோடி மதிப்பீடுகளை வெளியிட்டன.
ஆண்டு அடிப்படையில் ஜூலை மாதம் வாடகைக்கு விடப்பட்ட கொண்டோமினிய வீடுகளின் எண்ணிக்கை 11.4 விழுக்காடு அதிகம். மேலும், வாடகைக்கு விடப்பட்ட அத்தகைய வீடுகளின் ஐந்தாண்டு சராசரி அளவைவிட 3.8 விழுக்காடு அதிகம்.
தீவு முழுவதும் வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளில் 38.2 விழுக்காடு மத்திய வட்டாரத்துக்கு (ஓசிஆர்) வெளியே உள்ளவை.
எஞ்சிய மத்திய வட்டாரத்தில (ஆர்சிஆர்) வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் விகிதம் 33.4 விழுக்காடு. மத்திய வட்டாரத்தில் மட்டும் 28.4 விழுக்காடு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.
ஜூலை மாத வாடகை நிலவரத்தில் 0.9 விழுக்காடு ஏற்றம் பதிவானாலும், ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலையைக் காட்டிலும் 5 விழுக்காடு குறைவாகவே வாடகை விகிதம் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய வட்டாரத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.3 விழுக்காடும் எஞ்சிய பகுதிகளில் 4.4 விழுக்காடும் வாடகை குறைவாக இருந்தது.
கூட்டுரிமை வீடுகளை வாடகைக்கு எடுப்போர், ஜூன் மாத விடுமுறைக்குப் பிறகு குடும்பத்துடன் திரும்பி வந்துள்ள நிலையில், வாடகை மிகவும் கட்டுப்படியாகக்கூடியதாக இருந்ததைக் காணமுடிந்ததாக 99.co சொத்து நிறுவனத்தின் தலைமை தரவுப் பகுப்பாய்வு அதிகாரி லுக்மன் ஹக்கிம் கூறினார்.

