வீவக வீடு $2.18 மில்லியன்: வீடுகளை இணைக்கும் திட்டம் மறுபரிசீலனை

வீவக வீடு $2.18 மில்லியன்: வீடுகளை இணைக்கும் திட்டம் மறுபரிசீலனை

படம்: பிராப்பர்ட்டி குரு

25 Sep 2026 - 6:02 pm

2 mins read

தெலுக் பிளாங்கா வட்டாரத்தில் உள்ள ஒரு வீடு $2.18 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மூவறை அல்லது அதற்கும் சிறிய வீடுகளை ஒன்றாக இணைத்து ‘ஜம்போ’ வீடாக மாற்ற அனுமதிக்கும் திட்டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) மறுஆய்வு செய்து வருகிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த வீவக, குறிப்பிடப்பட்ட அந்த வீட்டின் விற்பனை விலை குறித்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கவலைகளைத் தாம் புரிந்துகொள்வதாகக் குறிப்பிட்டது.

இதுவரை அந்த வீட்டை வாங்குவதற்கான விண்ணப்பம் எதுவும் வரவில்லை என்றும் மலிவு விலையிலும் எளிதில் பெறக்கூடியதாகவும் பொது வீடமைப்பை வைத்திருக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளதாகவும் தனது பதிலில் அது குறிப்பிட்டது.

தெலுக் பிளாங்கா ஸ்திரீட் 31ல் 93பி என்ற முகவரியில் இரண்டு மூவறை வீடுகளை உள்ளடக்கிய அந்தச் சொத்தின் விலை $2.18 மில்லியன் என்பது, அந்த வட்டாரத்தில் அதேபோன்ற பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவில் அதிகம் என்றது வீவக.

கடந்த ஆறு மாதங்களில் அப்பகுதியில் உள்ள ஒரு மூவறை வீட்டின் விலை $673,000 முதல் $771,000 வரை என்ற மதிப்பீட்டில் உள்ளது.

அந்த விலையில் ஆக அதிக மதிப்பீட்டை இரண்டு மூவறை வீடுகளாகக் கணக்கிட்டால்கூட அதன் விலை $1.54 மில்லியனாகவே இருக்கும். இந்நிலையில், $2.18 மில்லியன் என்பது $600,000 அல்லது 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளதாக வீவக தெரிவித்துள்ளது.

வீடுகளை இணைத்து பெரிய வீடாக மாற்ற அனுமதிக்கும் திட்டம் 1993ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

கூடுதல் இடவசதி தேவைப்படும், தகுதியுள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டை அதனுடன் ஒட்டியுள்ள மற்றொரு வீட்டை இணைத்து ஒரு பெரிய வீடாக மாற்றிக்கொள்ள அந்தத் திட்டம் அனுமதிக்கிறது.

அதற்காக வீவகவிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதி கிடைத்ததும், அவர்கள் அந்த இரண்டு வீடுகளையும் ஒரே குத்தகை ஒப்பந்தத்தின்கீழ் ஒரு தனி வீடாக இணைத்துக்கொள்ளலாம்.

குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைப் வீட்டு உரிமையாளர் பூர்த்தி செய்த பிறகு, இணைக்கப்பட்ட அந்த வீட்டை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய முடியும்.

குறிப்புச் சொற்கள்