வீவக வீடுகள் கட்டுப்படியான விலையிலேயே இருக்கும்: டெஸ்மண்ட் லீ

2 mins read
d39b3ff3-2c80-40b7-a27a-b4f1fc49f27c
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களுக்கு வலையொலி மூலம் நேர்காணல் அளித்தார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் விலை கட்டுப்படியான அளவிலேயே இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் பல வீடுகள் கட்டப்படவுள்ளன என்றும் மறுவிற்பனை வீடுகளின் சந்தையில் பல வீடுகள் விற்பனைக்கு வரவுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் வலையொளி நேர்காணலில் பங்கேற்றபோது அமைச்சர் லீ இதனைத் தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் கட்டட வேலைகள் தாமதமாகின. அதனால் சந்தையில் குறைந்த அளவிலான வீடுகளே விற்பனைக்கு வந்தன. அதனால் வீடுகளின் விலை அதிகரித்தது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக வீடுகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் திரு லீ குறிப்பிட்டார்.

வீடுகள் தொடர்பாக எல்லாப் பிரச்சினைகளையும் அரசாங்கம் சரிசெய்யவில்லை என்றாலும் சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் பல முக்கியமான வீட்டுப் பிரச்சினைகளை அரசாங்கம் அடையாளம் கண்டு தீர்த்து வைத்ததாக அமைச்சர் லீ தெரிவித்தார்.

“2020ஆம் ஆண்டு வீவக 20,000 வீடுகளைக் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது. அந்த வீடுகள் மறுவிற்பனைக்குத் தகுதிபெறக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் கொவிட்-19 நோய்த்தொற்றால் கிட்டத்திட்ட 10,000 வீடுகள் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

“இது சந்தையில் கடுமையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது, அதைச் சமாளிக்கும் வகையில் விரைவாகக் கட்டட வேலைகள் முடிக்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் 92 திட்டங்களும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டன,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் மறுவிற்பனைக்குத் தகுதிபெறும் வீடுகள் எண்ணிக்கை 8,000ஆக இருக்கும். ஆனால் 2026ஆம் ஆண்டு அது 13,500ஆகவும் 2028ஆம் ஆண்டு 19,500ஆகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டுக்குள் புதிதாக 50,000க்கும் அதிகமான வீடுகளை வீவக விற்பனைக்கு விடும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்