யாரும் இதுவரை குடியிருக்காத பிடிஒ வீடுகளின் விற்பனை பற்றி வீவக விசாரணை

யாரும் இதுவரை குடியிருக்காத பிடிஒ வீடுகளின் விற்பனை பற்றி வீவக விசாரணை

1 mins read
5b28e713-7dbc-47eb-bc03-6647749a7d9b
டெப்போ ரோட்டில் உள்ள இந்த மூவறை பிடிஒ வீடு, இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. அதில் இதுவரை யாரும் தங்கவில்லை என்று கூறி, சொத்து முகவர் இதை விளம்பரப் படுத்தியுள்ளார். படம்: பிராப்பர்டி குரு -

குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தில் யாருமே குடியிருக்காமல் வீட்டு விற்பனை இணையத்தளங்களில் பிடிஒ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்ட சம்பவங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விசாரித்து வருகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 நம்பவர் வரை, குறைந்தபட்ச குடியிருப்புக் காலகட்டத்தின்போது தங்கள் வீவக வீடுகளில் தங்காது விதிமுறைகளை மீறிய 53 உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வீவக கூறியது.

அவர்களில் 21 பேரின் வீடுகளை வீவக வலுக்கட்டாயமாகத் திரும்ப எடுத்துக் கொண்ட. மீதமுள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புதுப்பிப்புப் பணிகள் ஏதும் இடம்பெறாத குறைந்தது மூன்று வீடுகள் சொத்து விற்பனைத் தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டதை அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

அந்த வீடுகளை, புத்தம் புதியவை என்றும் யாரும் இதுவரை அவற்றில் தங்கவில்லை என்றும் வருணித்திருந்தனர்.

குறைந்தபட்ச குடியிருப்புக் காலகட்டம் விதிமுறைகள் மீறப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கத் தான் தயங்கப் போவதில்லை என்று வீவக தெரிவித்தது.

அரசாங்க வீடுகள் உரிமையாளர்கள் குடியிருப்பதற்கானவை என்பதை வலியுறுத்தவே அக்கொள்கை நீண்டகாலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் அது சொன்னது.

குடியிருக்கும் குறைந்தபட்சக் காலகட்டத்தின்போது வீவக வீட்டை அவற்றின் உரிமையாளர்கள் முழுமையாக வாடகைக்கு விடவோ தனியார் வீட்டை வாங்கவோ அனுமதி இல்லை.

இது கழகத்திடம் இருந்து நேரடியாக வாங்கும் பிடிஒ வீடுகளுக்கும் மறுவிற்பனை வீடுகளுக்கும் பொருந்தும்.