ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மூத்த ஊழியர், கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
வீவகவின் மூத்த மேலாளரான 61 வயது திரு டான் சியாம் சுவா, லியோங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் இயக்குநரான 62 வயது திரு லியோங் ஆ சாய் ஆகிய இருவர் மீது அதே குற்றச்சாட்டை மீண்டும் சுமத்த முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் இருவருக்கும் எதிரான ஊழல் வழக்கு விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதியன்று தொடங்க இருந்தது.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
முகவர்களுடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாக திரு டான் மீது 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றம் சுமத்தப்பட்டது.
திரு லியோங் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
“நான் குற்றம் புரியவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எனக்கும் எனது குடும்பத்துக்கும் பேரளவு நிம்மதியைத் தந்துள்ளது,” என்று வழக்கு விசாரணை நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் கூறினார் திரு டான்.
தொடர்புடைய செய்திகள்
ஓராண்டுக்கு முன்பு திரு டான் மீது குற்றம் சுமத்தப்பட்டதிலிருந்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமக்கும் தமது மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கும் அது மிகவும் சவால்மிக்க காலகட்டமாக இருந்தது என்று அவர் கூறினார்.
குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளப்போவதாக அரசாங்க வழக்கறிஞர்கள் தம்மிடமும் தமது கட்சிக்காரரிடமும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிவித்ததாக திரு டான்னின் வழக்கறிஞர் திரு கென்னத் ஆவ் யோங் கூறினார்.
“எனது கட்சிக்காரர் நிரபராதி என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி திரு டானுடன் தொடர்புகொண்டு அவரை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்வது வீவகவின் பொறுப்பு,” என்று திரு ஆவ் யோங் கூறினார்.
தீர்ப்பு குறித்து திரு லியோங் மகிழ்ச்சி தெரிவித்தார். தாம் குற்றமற்றவர் என்றார் அவர்.
இனி தமது வர்த்தகத்தில் முழுக் கவனம் செலுத்தலாம் என்று அவர் கூறினார்.
தமக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர், வர்த்தகப் பங்காளிகள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்குத் திரு லியோங் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

