தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் கடைகளைக் கையகப்படுத்த வீவக முன்வரக்கூடும்

2 mins read
8e6883e7-b57b-49c8-9c5c-5db2d2fe32fb
சிங்கப்பூரில் சுமார் 15,500 வீவக கடைகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 8,500 கடைகள் தனியாருக்குச் சொந்தமானவை. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

தேவைப்பட்டால், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தனியாருக்குச் சொந்தமான வீவக கடைகளைத் தேர்ந்தெடுத்து கையகப்படுத்தும் என்றும் அது குத்தகைக்கு விடும் வணிகக் கடைகளின் ஒட்டுமொத்த விநியோகத்தை அதிகரிக்கும் என்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் புதன்கிழமை (செப்டம்பர் 24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீவக கடைகளின் விநியோகம் அதிகரிப்பதால், கழகத்தால் நேரடியாக வாடகைக்கு விடப்படும் கடைகள் அதிக விகிதத்தில் இருக்கும். இவற்றின் வாடகைகள் அண்மைய ஆண்டுகளில் நிலையானதாகவே உள்ளன.

குடியிருப்புப் பகுதிகளில் வாடகை அதிகரித்து வருவதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, கழகம் வணிகக் கடைகளை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திருவாட்டி சுன் பதிலளித்தார்.

சிங்கப்பூரில் சுமார் 15,500 வீவக கடைகள் இருப்பதாக அவர் கூறினார். இவற்றில் சுமார் 8,500 கடைகள் தனியாருக்குச் சொந்தமானவை. மேலும் சுமார் 7,000 கடைகள் கழகத்தால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

“தனியார் உரிமையுடைய வீவக கடைகளுக்கான சதுர அடி வாடகை அண்மையில் செங்குத்தான அதிகரிப்பைக் கண்டிருப்பதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் கூறினார்.

தனியார் வசம் உள்ள வீவக கடைகளுக்கான வாடகை விகிதங்கள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் வீவக குத்தகைக்கு எடுத்த கடைகளுக்கான வாடகை பெரும்பாலும் நிலையானதாகவே உள்ளது என்று செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

வாடகை அதிகரிப்பு, சிறிய அளவிலான கடைகளை உள்ளடக்கிய வாடகை, பரிவர்த்தனைகளின் அதிக விகிதத்துடன் ஒத்துப்போவதாகவும் அவை சதுர அடிக்கு அதிக வாடகையை வசூலிக்கின்றன என்றும் மூத்த துணை அமைச்சர் சுன் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

தனியார் வசம் உள்ள சுமார் 740 வீவக கடைகள் 30 ஆண்டு குத்தகையில் விற்கப்படுகின்றன. அவற்றில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கும் குறைவான குத்தகை எஞ்சியுள்ளன.

“இந்தக் கடைகள் படிப்படியாக கழகத்திடம் திருப்பித் தரப்படும். பின்னர் குத்தகைக்கு விடப்படும்,” என்றும் திருவாட்டி சுன் கூறினார்.

இனிமேல், வீவக கடைகளின் ஒட்டுமொத்த விநியோகத்தை கழகம் அதிகரிக்கும் என்றும், அதிக விகிதத்தை அரசாங்கம் நேரடியாக வாடகைக்கு விடும் என்றும் அமைச்சர் சொன்னார்.

“தேவைப்படும்போது, ​​ஏற்கெனவே உள்ள பேட்டைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய சில்லறை விற்பனைக் கடைகளை நாங்கள் அனுமதிப்போம். தேவைப்பட்டால் தனியார் வசம் உள்ள வீவக கடைகளைத் தேர்ந்தெடுத்து கையகப்படுத்தும் தெரிவும் அதில் அடங்கும்,” என்றும் திருவாட்டி சுன் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்